புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள்
நிறைய…
தத்தம் நிறம் குணம் முகம் மறைத்துத்
திரிகின்றார்;
அனேகர் சகுனிகளாய்ச் சிரிக்கின்றார்!
வெறுப்புப், பொறாமை, விசம்,
நெஞ்சிற் கொண்டயலைப்
பிரித்தாண்டு பகைமை பெருகவைத்து
காழ்ப்பு வன்மம்
குறையாமற் பார்த்துக்
குள்ளத் தனம் வளர்த்தார்!
பார்க்கத் தருமராய் பழகச் சகுனியாய்
மூர்க்கக் குணத்தோடே
மோதுகிறார் பலபேர்கள்!
அரிச்சந்திரர், தருமர், அருச்சுனர்,
பல வீமர்,
இராமர், இலட்சுமணர்,
நகுலர், சகாதேவர்,
எனப்புறத்தில் இருப்போரைக் கண்டு
அவர்களது
மனதோ டிணைய முயன்றால்…
அவர்களைப்போல்
இருக்கின்றார் சிலர்குணத்தில்…
எனினும் பலர் அகத்தில்
இருக்கின்றார் இராவணராய்,
இழிக்கின்றார் சகுனிகளாய்,
இருக்கின்றார் துரியோ தனர், துச்சா தனர்களாய்!
மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதரின் அகத்தின் நிஜம்சொல்லும்
கருவியொன்றை
நனவில்நாம் கண்டறிந்து
அதைக்கொண்டு அகத்திலென்ன
இருக்கென்று இனங்கண்டு
நிசமறியும் வரை…யார்தான்
இராமன் இராவணனென் றறிய முடியாது!
புறம்போல அகமில்லை…
புரிய வேறு வழியேது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.