தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள்.
பிணியொடு சாவு சிதைக்கவும்…தோன்றிப்
பெருகுது நிதம் பல உயிர்கள்.
இயற்கையில்…இன்பம், இடையிடை துன்பம்,
இரண்டுமே வருவது வழமை.
இதனுளும் சோரா தெழவைத்து உலகை
இயக்குவதால் வந்த செழுமை
வியப்பினை ஊட்டும்; இதற்குளே வீழ்ந்தோர்
விழ…தொடர்ந்தோடிடும் இளமை…
வெகு சிறப்பாக நவீனமுஞ் சேர்த்து
விளைவிக்கும் சூழலில் முழுமை!
எத்தனை பேர்தான் இறந்தனர்? அன்னார்
இதயத்தின் சிந்தனை ஊற்றும்,
எரிந்தும் புதைந்தும் தொலைந்திடும் போதும்
எப்படி வளர்ச்சியின் தோற்றம்
நித்தமும் பெருகும்? இதுவியப் பாகும்;
நிர்ணயம் செய்வதார்…ஏற்றம்?
நிச்சயம் ‘இயற்கை நியதி’யொன் றுண்டு
நீதி வழி செயும் மாற்றம்!





