சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து
யாவர்க்கும் தீமை செய்து – ஆண்டு
அழிவுகள் செய்வோர் பல்லாயிரம் பேர்களே!

“என்ன இது கொடுமை – நன்மை
இங்கு நிலைத்திட நாலும் புரிந்திடும்
மன்னர்க்கு இல்லை இடம் –
மண்ணை
வாட்டி வதைப்போர்க்கு நீள்கிறதே தடம்”
என்ற வரலாறு – இன்றும்
எங்கும் அரங்கேறும்; தீயர்க்குத் தான் காலம்.
தன்பணி செய்யும் எமன் – தனை
தடுக்க முடியாது; இது எங்களின் சாபம்!

‘மார்க்கண்டர்’ நீண்ட காலம் – இந்த
மண்ணினில் வாழ்ந்துயிர் காத்திடவே
ஆசைகள் கொண்டு நேர்ந்தால் -சிவன்
அன்றுபோல் வந்தெமன் தன்னை வீழ்த்தி,
பூமியில் சாவை ஓட்டி, – பாரம்
கூட்டிப், புவி சுற்றிடாது நிற்க
நாசங்கள் பண்ணிடலாம் -ஆக
நன்மைக்குக் காலங்கள் இன்றும் இல்லையடா!

அவரவர் சாவு என்றோ -எங்கோ
அறுதி, உறுதியாய்த் தீர்மானமாய்,
தவறாமலே நிகழும் – எமன்
தன் கடன் செய்வான்; தடுத்திடலும் பாவம்.
சிவனுக்கொரு விண்ணப்பம் – ‘இயம
சங்காரம்’ செய்யாமல் தீயவரின் குணத்,
தவறைத் திருத்தி மாற்றும் – ‘மார்க்
கண்டரையுங்’ காக்கத் தாரும் ஐயா வரம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.