எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும்
மேவிக் கிடக்கின்ற மிகுவளங்கள்
எம்வாழ்வின்
தேவைகளைத் தீர்க்கச் சேர்ந்து பெருகிவரும்.
எங்கும் பரந்த எழில்வயல்கள்,
தோட்டங்கள்,
தங்கு தடையின்றித் தந்தருளும் செல்வத்தை.
பூமரங்கள் பூக்கும்.
பொலியும் பழவகைகள்.
ஆழக் கடலெங்கும் அமுதம் திரண்டுவரும்.
வானம் ஒழுங்காய் வரமருளும்.
கோடையுடன்
மாரி… பெருகாதும் குறையாதும் வந்துபோகும்.
சின்னத் துளிவிழுந்தால்…
சிலிர்த்து வரண்ட நிலம்
புன்னகைக்கும்.
பசுமைபூசிப் புரக்கும்.
ஆவினமும்,
கால்நடையும், பட்சி பறவைகளும்,
கைகொடுத்தெம்
வாழ்வுக் குதவும்.
மாய்ந்து களைத்துழைக்கும்
தோள்களினால்…
இம்மண் சோம்பல் இலாதொளிரும்.
அறிந்த தொழில்கள்,
அதில் நிபுணத் துவங்கள்
நிறைந்தவரால்…செயல்கள் நிமிரும்.
வற்றாத
ஆழக் கிணற்றுநீர் அமுதம்
உயிர் ஈரம்
காயாது காக்கும்.
எங்கள் கலை வகைகள்,
கோவில் குளங்கள் குதூகலத்தைப் பறைசாற்றும்.
கூடப் பிறந்த குணம்,
இயல்பு, கொண்டாட்டம்,
சாப்பாடு, சடங்கு, சம்பிரதாயம்,
இன்று
மூப்படைந்தும் இன்னும் முடிவுறாத நம்பிக்கை,
யாவும் எம் தனித்துவத்தை
யாவருக்கும் பறைசாற்றும்.
எங்கள் விழுமியங்கள், இயல்பு,
அடையாளம்,
எங்களது பாரம் பரியம், மரபுரிமை,
எங்கள் பழக்க வழக்கம்,
எம் பண்பாடு,
எங்களது வாழ்நிலத்தில்
எங்களது வாழ்வுரிமை,
எங்கள் சமூக நோக்கு,
எங்கள் வரலாறு,
எங்களது கொற்றம்,
எம்முகத்தை நிரூபிக்கும்.
நாகரிகம், புதுமை, நவீனம்,
என எதும்…நம்
கோலம் கலைக்கக் குறிவைத்து வந்தாலும்…
எமக்குள்ளே சாகாது கிடந்தியக்கும்
எம்பண்பு
எம்மை உயிர்ப்பிக்கும்.
எந்த அந்நியம் புகுந்து
எம்மை விழுங்க முயன்றாலும்
இவை…நாங்கள்
முகமிழந்து போகாமல்,
முற்றாய் அதில் கரைந்து
மிக நலிந்தும் வீழாமல்,
எமை மீட்டுக் காத்தருளும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.