வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது?

எங்கள் பாதை என்ன என்று நாமா கண்டனம்? – அது
எங்கு போகும்? எப்ப சேர்க்கும்? யார் அறிந்தனம்?
எங்கள் முன்பு யாவர்? என்ன வாகனம் வரும்? – அவை
ஏற்றிடுமோ? ஏற்றிடாதோ? யார் தெளிந்தனம்?

என்ன ஆகும் அடுத்தகணம் என்றுணர்ந்திடோம்- நாளை
எம் பயணம் பற்றி யாம் எதிர்வு கூறிடோம்.
முன் நடந்தோர் சொன்ன சொல் மறந்து போகிறோம்- பாதை
முடியுமட்டும் பயணஞ் செய்வமோ? அறிந்திடோம்!

ஒவ்வொருவர் பாதை வேறு, பயணம் வேறுதான். -நாங்கள்
ஒவ்வொருவர் செல்லும் வேகம், தூரம் வேறுதான்.
ஒவ்வொருவர் சகபயணி, வண்டி வேறுதான் – சென்று
ஓயுமட்டும் எது நடக்கும்? கேள்வி நீளுந் தான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.