ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ…
தீர்மானஞ் செய்கிறது!
இக்கணத்தில் எனக்கென்ன
நடக்குமென்றும்,
உனக்கும் இவன் அவன் எவனுக்கும்
நடப்பது எது என்றும்
நாமுரைத்தல் சாத்தியமோ?
அந்தக் கணத்தில் அவரவரின் ‘பிராப்தத்தில்’
வந்த தெதுவோ
அதுதான் நடந்தேறும்!
அந்த ஒரு கணம்போற்தான்
வாழ்க்கையின் ஒவ்வொரு
விந்தைக் கணமும்
விடுகதைபோல், ஒருபுதிர்போல்,
யாரும் அவிழ்க்க முடியா முடிச்சுப்போற்
தானே தொடரும்?
இந்தக் கணத்தினிலே
எனக்குவெற்றி தோன்றிடலாம்.
உனக்குத் தோல்வியாகிடலாம்.
எனக்கு இலாபம் வந்திடலாம்.
உனக்கு நட்டம் ஏற்படலாம்.
நான் தப்பிப் பிழைத்திடலாம்.
நீ சிக்கிச் சிதைந்திடலாம்.
நான் மாண்டே போயிடலாம்.
நீ மீண்டும் உயிர்த்திடலாம்.
கடந்துகொண் டிருக்கின்ற ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கும் எது என்றும்,
அடுத்த நொடி என்ன
நடந்துவிடும் என்றும்,
நாம் ஏதும் தீர்க்கமாக
முடிவுசொல்ல முடியாது!
நினைத்தது நடக்குதென்றால்,
திட்டமிட்ட வாறு செயல்நடந்து முடியுதென்றால்,
கிட்டநின்று விதி, காலம் வாழ்த்துதென்றும்…
நினைத்தது
கிட்டவில்லை என்றால்,
கெட்டித் தனமாகத்
திட்டமிட்ட வாறு செயல் நடக்க வில்லையென்றால்
எட்டநின்று விதி, காலம் எதிர்க்குதென்றும்…. தான்அர்த்தம்!
நினைத்ததெல்லாம் நடந்ததொரு நேரம்;
அதற்கெதிராய்
நினைத்ததெதும் நடவாத நிஜம்
காலை வாரிவிடும்
நேரம்; இரண்டினையும்
நேரே நாம் கண்டுள்ளோம்!
நாமும் அனுபவித்தோம்;
பிறரும் அனுபவிக்கப்
பார்த்துள்ளோம்;
‘ஆகும் ஊழ் போகும் ஊழ்’
என இதனைக்
கூறும் மறை;
‘மெய்யை’ யார் கண்டு தெளிகின்றோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.