விடிவெள்ளி எழுமென்று விழிபூத்திருந்தோம்.
விதிமாற்றும் திசைநோக்கி வழிபார்த்திருந்தோம்.
தொடுவானில் தெரிகின்ற திலக்கென்றிருந்தோம்.
தொடர்ந்தேனோ தடம்மாறித் தடுமாறுகின்றோம்?
எமைக்கூட்டிச் செல யாரும் இலை என்ற துன்பம்
எமக்கான வழிசொல்ல இலையாரும் முன்பும்.
எமைவீழ்த்தத் தடைபோட, எமைச்சுற்றிப் பொங்கும்
எமர் ஓட…விரட்டாட்டி எது கையில் மிஞ்சும்?
வரலாற்றின் புனிதங்கள் வரமற்றுப் போமோ?
வளர்ந்தோங்க முயல்கின்ற மனம் நொந்து போமோ?
எரிபற்று நிலைகெட்டுத் திரி நூர்ந்து போமோ?
இருளோட்ட வருந்தீபம் அணைந்தற்றுப் போமோ?
கனவிங்கு நனவாகக் கருமங்கள் நாட்டி,
கடமைக்கு விசுவாசம் செயல் தன்னில் காட்டி,
மனதுக்குள் ஒளியேற்றித் துணிவூட்டி மீட்டி,
மனிதப் பண்பழியாமல் வளர்வோம் பேர்ஈட்டி.