ஏமாளி

“ஏமாளி நீ” என்றாய்.
“இந்த உலகத்தில்
வாழத் தெரியா வகையில் நீயும் ஒன்று” என்றாய்.
நீதி நியாயங்கள்,
நேர்மை அறம் உண்மை
பாவத்திற் கஞ்சல்,
“பரலோக தெய்வங்கள்
தண்டிக்கும்” என்றபயம்,
“சமூகம் எதைச் சொல்லும்”
என்ற தயக்கம்,
“மானம் தொலைந்துவிட்டால்
வாழவே கூடாது” எனும் கொள்கை,
அடிக்கின்ற
காற்றின் வழத்திற்கு எல்லாம்
தலைக்கறுப்பைக்
காட்டாது வாழ்கின்ற கண்ணியம்,
“கடமைக்கு
ஏற்ற பலன்போதும்…
எல்லாம் எனக்கென்றேன்
வாழவேண்டும்” என்கின்ற வைராக்யம்,
யாரென்ன
சொன்னாலும் சுயநலம் காத்து…
“இலாபமெங்கே”
என்றதற்காய் எந்த எல்லைக்கும்
‘இறங்காத’
எண்ணம்,
“பிழைவஞ்சம் எதுஞ்செய்து…
உய்தெதுவும்
மிஞ்சாது” என்ற மிகுதெளிவு,
‘இவை’ கொண்டு
வாழ்வை…நெளிந்து வளையாத
நேர்கோட்டில்
வாழ்வதனால்;
பிறரை ஏய்த்து வளர்ந்தொளிராக்
காரணத்தால்;
“கர்ணன், அரிச்சந்திரன் போன்று
வாழவேணும்” என்று…
வந்த வாய்ப்புகளை மறுத்து
ஆளத் தெரியாது,
அடுத்தவரின் சொத்து செல்வம்
தேடத் தெரியாது,
‘அப்படியே’ இருப்பதனால்;
“பேயன் நீ” என்றாய்…
“பிழைக்கத் தெரியாத
சேயன் நீ” என்றாய்… சிரித்தகன்றேன்!
‘இவை’ செய்து
ஏய்த்தவர்கள் என்னானார் சிலநாளில்..? என நாளும்
பார்ப்பதனால்;
உனை நாளை பார்க்கவும் போவதனால்;
“பேயனென்றே சொல்” என்று
பேசாமல் திரும்புகிறேன்!
“காலம், அறம், தெய்வம் காட்டும்
நல் வழியை” என்று,
” போதும் இதே” என்று
போய்க்கொண் டிருக்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.