ஞானம் பெறுக!

கண்கள் திறந்திருப்பீர் – இரு
காதுகள், மூக்கை, விரித்து இரசித்துமே
எண்ணத்தினைக் குவிப்பீர் – உங்கள்
இதயத் தினையும் வெளியாக்கிக் கொள்ளுவீர்.
வண்ணம் மிகு எழிலும் – இசை
வார்ப்பும், கவியும், மலர்களும், தென்றலும்
பண்ணும் நவரசத்தை -உங்கள்
பஞ்ச புலன்களுள் இட்டு நிரப்புவீர்!

பாதம் நிலத்திற் பட – காற்றும்
பற்றும் அனல், வெயில், ஆழி அலைகளும்
மேனியைத் தீண்டி விட – இந்த
மேன்மை ஐம் பூதமும் எம்மைத் தழுவிடு
– மாறு திரி…நிமிர்ந்து- அதே
வாழ்வை வளர்த்து உடலை வனைந்திடும்;
தேகம் உறுதி பெற – சூழல்
செதுக்கும்; இயற்கையோ டியைந்து ஜெயித்திடு!

நாமும் ஐம்பூதங்களால் – ஆனோர்
நாமும் அவற்றின் குணங்கள் குறிகளைத்
தாம் கொண்டோர்; நம் உடலும் – இவை
சாற்றும் விகிதத்திற் தானே சமைந்தது!
ஆகையால் சூழலுடன் – சேர்ந்தால்
அற்புத மாகவே வாழ்வு ஒளிர்ந்திடும்!
நாலும் இயற்கை தரும்! – நாளை
ஞானம் இயற்கையே தந்துனை வாழ்த்துமாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.