நல்லூரான் புகழ்

எல்லையற்ற எழில்குவிந்து ஒளிர்ந்து இருக்கும்.- திக்கு
எட்டினிலும் புனித அருள் நிறைந்து கொழிக்கும்.
‘நல்லை’ கொடியேறி விட்டால் ஊரே சிலிர்க்கும் -திரு
நாள்கள் ஒவ்வொன் றினிலும் புது மேன்மை துளிர்க்கும்.

‘ஓர் வடிவம்’ ஆனபோதும் நூறு சோடனை – அவை
ஒவ்வொன்றுமே வகை எழிலை நல்கும் பார்த்திணை.
யார் இரசித்திடாதார் ‘அலங்காரக் கந்தனை’? – அவன்
யெளவனத்திற் கெங்கிருக்கு சொல்லு ஈடிணை?

வெள்ளி மயில் ஏறி ‘உள்ளே’ பகலில் சுற்றுவான் – வெளி
வீதி… மாலை வேறு வாகனத்தில் தோன்றுவான்.
வெள்ள நாத சுர மழையில் நீந்தி ஓடுவான். – தமிழ்
வேதம் பாடக் கேட்டு மெய் சிலிர்த்து ஆடுவான்.

கூடிவந்து உள்ள அன்பினாலே பக்தர்கள் – எழிற்
கோலம் கொள்ளும் வேலைப் பார்த்து ஆவர் பித்தர்கள்.
நாடி…நெஞ்சில் நிம்மதியும் அருளும் கொள்பவர் – நல்லை
நாயகனை நம்பி என்றும் வாகை சூடுவர்.

இடர்கள் எட்டிப் பார்த்துப்… பின் வாங்கி ஓடிடும் – சூழும்
இன்னல்…வேலின் அற்புதத்தினால் அகன்றிடும்.
தடைகள் தோன்றினாலும் ‘கொடி ஏறப்’
போய்ப்படும்.- ‘நல்லைச்
சண்முகரின்’ திட்டம் யார் அறிந்திட இயலும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.