ஆளவைப்பான்

‘அலங்காரக் கந்தன்’ எழில் நல்லூரான் – யாழின்
அடையாளம் என என்றும் பொலிகின்றான்.
‘நிலை’ என்ன வரும்போதும் நிழலாவான் -எங்கள்
நிஜக் காவல் அரணாக நிலைக்கின்றான்.

கொடும் பஞ்சம், பிணி, போர்கள் சுடும் போதும் – உயிர்
குலையாது கரைசேர்த்ததவன் பாதம்!
விடைசொல்லும் சரியாக அவன் வாயும் -அது
விதியாகியதே எங்கள் வரலாறும்!

சிவனுக்கும் உபதேசம் செய்த மகன்-சுரர்
செருக்கோடப் ‘ பெருங்கோலம்’ கொண்ட குகன்.
எவர் கேட்டு அழுதாலும் இரங்குபவன்- எழும்
இடர்கட்கு வேலால் தீர்ப் பெழுதுபவன்!

தினை, தேனில் இனிக்கின்ற மாவிளக்கில், -நேர்த்தி
தீர்க்கின்ற பிரதட்டை காவடியில்,
தினம் வேண்டி நீ ஏற்றும் சூடத்தினில், -உந்தன்
செயல் எண்ணி… வரம்சேர்ப்பான் நின்கரத்தில்!

சூரர்களை வீழ்த்துதற்கு வேலெடுத்தான் – எவர்
துயர்க்கும் ‘பன்னிரு விழியால்’ தீர்ப்புரைப்பான்!
யார்க்கும் அறம் மாறாமல் வாழ்வருள்வான். -நிஜ
ஞானம் பெற காலில் விழு…ஆளவைப்பான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.