‘ராஜ பவனி’ ‘வசந்த மண்டபத்’திருந்து
ஆரம்ப மாக,
தவில் நாத சுரம் பொழியும்
“தந்ததன தானா தந்த தன தா” வாம்
கம்பீர மல்லாரி கலையாட்ட,
வகைவகையாயக்
கொம்பு குழல் களிறுகளாய்ப் பிளிற,
கொடிகுடை
ஆலவட்டம் சூழ,
சாமரைகள் தென்றல்தர,
முன்னுக்குப் பின்னாய் முழங்கிப்
பலவிதக்
கிண்கிணி மணிஆர்க்க,
கெத்தாய்ப் புகழ் சொல்லிப்
பண்ணிசைகள் பாட,
பாற் சாம்பிராணி தூவித்
தூபப் புகைபரவிச் சுகந்தமூட்ட,
அடுக்கடுக்காய்த்
தீபங்கள் ஆராத்தி சேவிக்க,
தீச்சட்டி
ஒவ்வொன் றிலுஞ்சுடர்கள்
வரவேற்பு நடனமிடும்
வெவ்வேறு மங்கையராய் விரைந்தாட,
சிலிர்க்கவைக்கும்
கட்டியம்; அதனின் கணீரென்ற சொல்லடுக்கு;
எட்டுத் திசையும் அசரீரியாய் முழங்கி…
“ஸ்ரீமன் மகா ராஜாதி ராஜ”…
“பதினான்கு
லோக அதிபதி”…
“விஸ்ராந்த கீர்த்தி”…
“அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா”… என
நெகிழ்ந்து துதி சொல்ல,
நிரந்தரத் ‘தமிழரசன்’;
பார் புகழும் மாமன்னன்;
பதி ‘நல்லூர் அலங்காரன்’;
ஊர்போற்றும் எழிற்கந்தன்;
ஒளியூட்டும் அதிரூபன்;
யார்வந்து போனாலும் எமைஆளும் நம்வேந்தன்;
நாலு திசைகாக்கும் நம்தலைவன்;
இங்கியங்கும்
யாவையையும் முடிவுசெய்யும் எம் முதல்வன்;
தங்க வைர
வேலேந்தி…
கையிற் சேவற் கொடி தாங்கி…
மேனி மினுங்க நகைசாத்தி…
நிறநிறமாய்
மாலை பல சூடி…
பன்னீர் சந்தனம் பூசி…
தேவியரும் கூடி…வர;
‘பல்லக்குகளாம்’
ஆனை, மயில், அன்னம்,
ஆடு, சிங்கம், மகரம்,
பாம்பு, கிளி, குதிரை,
காராம் பசு, இடும்பன்,
தங்க மயில் அன்னம், தங்க எலி ரிஷபம்,
மஞ்சம், பூச்சப்பறம்,
கைலாச வாகனம்,
தங்கரதம், விண்ணைத் தழுவுகிற சப்பறம்,
தன்னிக ரில்லாத இரதம்,
தமில்… ஏறி
தொண்டர்கள்
கொம்புகாவி வடமிழுத்துக்
குளிர்ந்து அழைத்துவர….
தன்குடிகள் என்னென்ன
கேட்டனவோ…
அத்தனையும்
அள்ளித் தருகின்றான்!
அருளைப் பொழிகின்றான்!
வெள்ள மெனஅடியார்
மிகுந்திருக்கும் வீதிகளில்
வந்து வினையறுத்து வரமளித்து
‘நல்லாட்சி’
இன்றும் நடத்துகிறான்!
ஈர்த்தணைத் துயர்த்துகிறான்!
‘தன, கனக, வஸ்து, வாகனம்,
இலக்ஷ்மிகரம்’,
தினந்தோறும் சேவிக்கும்
சேய்கட் களிக்கின்றான்!
“லோகா சமஸ்தா சுகினோ பவந்தெ”ன்றும்
யார்க்கும் “பரிபூரண கிருபா கடாட்சம்
சேரட்டும்” என்றும் சொல்லித் திரும்புகிறான்!
அன்றொருநாள் நிகழ்ந்த அரசர் பவனியைநாம்
கண்டதில்லை;
‘நல்லூர்த் திருவிழாவின் கம்பீர-
ராஜ பவனி’ யைப் போல்
இருந்திருக்குமோ அன்றை
‘ராஜ பவனி’?
இருந்திருக்க வாய்ப்பில்லை!