வாயினால் உனைப் பாடிப் பரவலே
வாழ்க்கை… என்றுதான் வாழும் பலரிடை
யானுமோர் மகன்; உன்றனின் வாசலில்
யாசகன்; வரும் இன்பங்கள் துன்பங்கள்,
யான் அடைகிற வெற்றிகள் தோல்விகள்,
நன்மை தீமைகள்,யாவும் நின் செய்கையாய்
வாழ்பவன்; எனை வாழ்த்திடு வேலவா!
மடியில் வைத்து வரந்தந் தருளடா!
“நீ… எனை சரியாக இயக்குவாய்
நிதமும்…என்றுதான் நம்பி நடக்கிறேன்!
ஆசைகள், அறியாமை, அவாவாலென்
அகமும் கேட்கிற யாவையும் நல்கிடாய்.
யானும் கேட்காத போதும்…எனக்கான
யாவையும் நீயாய்த் தந்தும் சிரிக்கிறாய்.
‘காலம், கோள்களின்’ சூழ்ச்சிக் கிடையிலும்
காத்து நிற்கிறாய் கண்டு அறிகிறேன்.
நீ நடத்தும் திருவிளை யாடல்கள்
நீதி நியாயத்தை ஊர்க்கு உரைத்தது!
சூரர் ஆடவும் விட்டு… விழுத்தியும்
சொல்கிறாய்…நிஜத் தத்துவங்கள் நூறு!
யாரையும் பார்த்தியக்கிடும் ‘நல்லைவேல்’
நலிவிடரிலும் வாழ்க்கையின் ஞானத்தை
மோன மாகவே பேசி உணர்த்துது
முழுதும் உன்செயல்; யானின்றுணர்ந்தது!