நல்லையின் கோபுரம் வரவேற்க
நாதமும் வேதமும் உயிரூட்ட
பல்வகை வாத்தியம் இசைமீட்ட
பாரடா கண்கள் எம் இடரோட்ட!
விந்தைகள் ஆயிரம் நிதம் தோன்றும்
வீதியில் சேவலின் கொடி ஓங்கும்.
மந்திரம்…. சிந்திடும் மழையாகும்
வாசலில்… வேல் கணம் விளையாடும்.
தேனும் தினை அதும் தான் கலந்து
தீஞ்சுவை மாவிளக்காய்ப் படைத்து
‘கார்த்திகை’ நாளிலே தீபமிட்டோம்,
காதலிப்பாய் எனக் காத்து உள்ளோம்!
‘வள்ளியைப்போல்’ நாங்கள் யாவருமே
மாவிளக் கேற்றினோம் வீதியிலே!
துள்ளி வா நீ ‘கிழ வேசமிட்டே’…
தொட்டணைத்து ஏற்றணை எம்மையுமே!
செந்தமிழால் தொடர்ந் தர்ச்சனையும்
தேன் சுரத்தால் ‘இசை அர்ச்சனையும்’
தந்தனம்…நீ மனம் இளகாயா?
சம்பவம் செய்துனைத் தருவாயா?
விண்ணவரின் துயர் விழத்… தோன்றி
மேவிய மும்மலம் கெட… வேண்டி
சண்டையில் மோதிய சுரரோடு
சந்நத மாடிய பெருமானே!
கந்தகக் காற்றது அகன்றாலும்
காய்கிறோம் மூச்சினில் இதமற்றே!
சந்தனம் பூசியும் வருவாயே…
சந்ததிச் சுவாசத்தில் நிறைவாயே!