அவன் செயல்

‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து
எங்களது
‘பிணிப்- பணிகள்’ தம்மை
பிய்த்துக் குதறிடுது
ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’!
நம்…புரியா
வாழ்க்கைப் பயணத்தில்
வழிகாட்டும் ‘குமரன் தாழ்’!
ஊரோடொத் தோடாது,
ஒழுங்கை மறுதலித்து,
ஊறுசெய்து,
தருமம் உணராது,
ஆணவத்தில்
சீறி அதர்மச் செயல்புரிந்து,
தம் அற்பக்
காரணம் தேவைகட்காய்
களங்கம் செயநினைக்கும்
‘மாறுபடு சூரருக்கு’;
அறப்படித்து மமதையுடன்
அகங்காரத் தினோடு, அறத்தைத் தவிர்த்து,
புகழுக்காய்… யாரோ புல்லுருவிகள் ஏவ… நம்
அடையாளம் தனித்துவத்தை
அழிக்க முயல்வோர்க்கு;
விடையெழுதும் ‘பன்னிரு கையின்
அறுபது விரல்கள்’!
நம்பிக்கை வைத்து, நீதி நேர்மை வழி தெளிந்து,
நன்மை பிறர்க்களித்து,
யார்க்கும் தீங்கிளைக்காது,
நடந்தால்…இடர்துன்பம் ஏவி
நமன்நெருங்கும்
நொடியிலும் நூலிழையில்
நினைக்காக்கும் ‘குகன் பார்வை’!
இன்று இளமைத் துடிப்பில்
எதுஞ் செய்திடினும்,
நன்றே நம் ஆற்றலென நமைநாம் புளுகிடினும்,
“வென்றியல்லால் வேறில்லை” என
மமதை கொண்டிடினும்,
நாளை முதிர்வில்; நலிவில்;
பிணி, தனிமை
சூழுகையில்;
ஏக்கம் துரத்திடையில்;
ஏங்காமல்
நீ இன்றே … காப்பாய் எனப்பணிந்தால்…
உடல் உயிர்க்கு
நோ வலிகள் போக்கி உதவும் ‘அவன் வாய்ச் சொல்’!
யாரும் சமானமெனப்,
பேதம் எதுவுமற்று,
யாரையும் வரவேற்கும்…
‘நல்லூரின் தலைவாசல்’…
நித்தமும் வந்து,
நெடுஞ்சாணாய் வீழ்ந்தெழுந்து,
‘அற்புதத் திருவிழாவின்
அலைத் தலைச் சனக்கடலில்’
ஓர்துளியாய் உனைஎண்ணி
உருகி ஒரு ஓரத்தில்
ஆணவம் அகன்று அற்பன்தான்
என்றுணர்ந்து,
நீ நின்றால் போதும்.
நிர்மூலம் ஆக்கிநின்
தீ வினைகள் தீய்த்துத்
தேவ நிலைக்கேற்றும்
வேல் அயலில் ஊறும்
‘ஆன்ம அலை அதிர்வு’!

பணி – பாம்பு.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.