உள்ளப் பனிக்கட்டி உருகிக் கரைந்துவரும்
வெள்ளம் இருகண்ணால் வழிந்து
விழுந்தோட
நிற்கின்றோம்;
நின்றன் நிஜஎழிலைக் கண்டு…வீதி
சுற்றி வருகையிலே
தொழுது மகிழ்கின்றோம்!
அள்ளஅள்ளக் குறையா அழகுச் சமுத்திரமே…
கொள்ளை அடிக்கின்றாய் குமரா
நம் மனதுகளை!
நித்தமொரு சோடனையில் நீஎழுவாய்.
சந்ததமும்
புத்தம் புதிதுடுப்பாய்.
பொன்னகைகள் பல அணிவாய்.
ஒவ்வொரு நாளும் ‘ஒருநிற
வானவில்லாய்’
எவ்வாறு மாறுகிறாய் என நாமும்
வியக்க நிற்பாய்.
வர்ணிக்க வார்த்தைகள் அற்று,
நின்வனப்புக்
கற்பனை அடிமுடியைக் காணும் தகவிலாது,
“ஆ” என்று வாய்பிளந்து,
‘அலங்காரா’ உந்தனது
பேரழகில் பேச்சற்று,
உயிரைப் பறிகொடுத்த
கூடுகளாய் யாம் நின்
கோவிலினைச் சுற்றுகிறோம்!
ஆராத்தி எடுக்கின்றோம்.
தீபங்கள் காட்டுகிறோம்.
பூத்தூவி மண்டகப் படிகளிலே
நீவிரும்பும்
பட்சணம் படைத்து,
பரவசத்திலே சிலிர்த்து,
“விட்டுவிட்டும் போகாதே எமை”
என்று கெஞ்சுகிறோம்!
உள்ளப் பனிக்கட்டி உருகிக்
கரைந்துவரும்
வெள்ளம் இருகண்ணால் வழிந்து
விழுந்தோட
நிற்கின்றோம்;
நின்பொன் நிஜ எழிலைக் கண்டு…வீதி
சுற்றி நீ வருகையிலே தொழுது
உயிர்க்கின்றோம்!