நாளும் ஒவ்வொரு விதமாய் நடக்கும் திருவிழா -திரு
நல்லையிலே நித்தம் புதிய சேதி சொல் உலா!
காலையிலே மாம்பழத்திற் காக மோதினான் – அண்ணன்
கணபதியும் கனியைக் கொள்ள பழநி ஏகினான்.
ஆண்டிக் கோலத்தோடு வேலன் வாடியேங்கினான் – அந்த
அரிய கனியினாலே என்ன ஞானம் சொல்கிறான்?
தேனும் பாலும் பஞ்சாமிருதமும் கொண்டபிஷேகம் -பன்னீர்
சேர்த்து சந்தனமும் சாத்தி கோபம் குறைத்தும்
யாவருக்கும் அன்னதானம் அள்ளியூட்டியும்- பழநி
ஆண்டவனார் செய்தார் நல்லை ஊரில் அற்புதம்.
பரி அணியின் தலைவன்,மூன்று லோக அரசனாய் – வெல்லும்
படைவரிசை சூழ கம்பீர மன்னனாய்
வருகை தந்தான் மாலை… திக்கில் வேட்டையாடிட! – மும்
மலங்கள் சாய்த்து எங்கள் வாழ்வு உய்ய வைத்திட!