(தனன தனன தனன தனன
தனன தனன தன தான….சந்தம்)
எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’;
இரவும் பகலும் அதைநானும்…
எழுதி உலகும் வியக்கும் வகையில்
இசைக்க வரமும் தருவாயே!
கனவில் நனவில் கணமும் கவிதைக்
கருக்கள் தருக… வடிவேலா!
கலையின் பொழிவில் ககனம் மகிழ
கடன்செய் திடவும் அருள் தாடா!
தமிழின் அழகில் தனையும் மறக்கும்
தலைவன் முருகன் அறிவேன்யான்!
தமிழை வளர்க்கும் தனயன், குமரன்
தமிழின் கடவுள்… புவி சொல்லும்.
தமிழின் பழமை ஒழுக… புதுமை
தனையுங் கலந்து தருமாப்போல்,
சகல திருவும் பொலிய… வரமும்
தருவன் அழகன் பெருநாளில்!
தவிலும் குழலும் பஜனை இசையும்
தவளும் தெருவில் வருகின்றான்.
தரையில் உருளும் தழுவ உருகும்
சகல ரினையும் தொடுகின்றான்.
கவிஞன் எனது கவிதை களையும்
கனிகள் எனவே ருசிக்கின்றான்.
கறும வினைகள் கருகி அணைய
கருணை மழையும் பொழிகின்றான்!