உன்னை விட மாட்டோம்.

நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே
நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே
வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே!
மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே!
சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம்
தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும்.
நாதிகெடும் நம்குடிக்கு நீதிதர வாரும்.
நஞ்சுநிறை நெஞ்சுகளின் வஞ்சம் சுடு; போதும்!

காடு கடல் தாண்டி பல போர் விரட்ட ஓடி,
கண்டபலன் ஏதுமிலை நொந்ததினம் வாடி.
பாடுபல பட்டகுலம் பலிகளிட்டு ஆடி
பசி, தாகம் தீராமல் வளர்க்கிறது தாடி.
நாடு நலம் காண வழி யாருரைப்பார் கூடி?
நம்பிக்கைகள் பொய்க்கிறதே… தீ இடர்கள் சாடி
கேடுகளை ஓட்டு முருகா வரங்கள் தாநீ!
கீழ்நிலை இருந்துயர்த்து மேல் நிலைக்குக்… காவி!

உன்னைவிட யாரும் துணை இல்லையென் றிருந்தோம்.
ஊக்கம் தர ஆட்களில்லை ஆகையால் நலிந்தோம்.
பொன்பொருள் இழந்தோம்; நிஜ நிம்மதிக் கலைந்தோம்.
பூர்விக நிலத்தில் குலம் வாடியே உலைந்தோம்.
துன்பம் தொலைந்தோடவில்லை; தோள்களும் துவண்டோம்.
தொட்டு வடம் பற்றி உனைத் தஞ்சமும் புகுந்தோம்.
அன்னையென நல்லையில் இருந்துதவு கேட்டோம்.
ஆறுமுகா என்றுமினி உன்னை விட மாட்டோம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.