வென்று எழ வை!

ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா?
ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா?
ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா?
அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா?
வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா?
வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா?
நாதி கெட நம்மை நடு வீதி விடுவாயா?
நல்லையடிப் பொன்நிழலில் நிற்க அருள் வேலா!

யாருனது அண்மையில் இருப்பதென ஏங்கி,
அல்லும்பகல் உன்னடியில் சுற்ற வரம் வாங்கி,
யார் சுமப்பதென்று அடி பட்டு வரும் போட்டி-
யால் பலர் பொறாமையுற வைத்தது ஏன் மாட்டி?
பார்புகழும் உன்றனுக்கு தொண்டு செயக் கூடி
பண்படவும் வைத்தனை; யாம் செய்த பிழை சாடி
தீர்த்தந் தெளி… நாம் வளர…நாளையுமுன் வீதி
சென்று தொழ… நல்வரங்கள் நல்கு; உரை நீதி!

யாம் சிறியர் நீ பெரியன் நல்ல வழி காட்டு.
நம்மைப் புடம் போடு… நமை ஞான வழியோட்டு.
தேம்பிவிழ வைத்தனை; எம் சென்னி தொடு தேற்று.
தீயமனம் தீயகுணம் தீய்த்து நமை ஏற்று.
பாம்புகளாய் தொல்வினை துரத்தும் அவை சாய்த்து
பச்சைமயிலுக் குணவு ஆக்கு; கணம் நோக்கு.
வீம்புடை பொறாமைகளை வீழ்த்து; உனைப் பார்த்து
வென்றெழ வை; எம் பிறவிப் பாவம் பழி தீர்த்து!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.