திரு நல்லை.

யாழின் தனித்துவம்.
யாழின் பெருமையம்சம்.
யாழின் திமிர், கர்வம்.
யாழ் மரபின் குறியீடு.
யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின்
அடையாளம்.
யாழின் கட்டடக் கலையின்
விஸ்வரூபம்.
யாழ்ப்பாண நிர்வாகச்
செம்மைக் குதாரணம்.
“யாரும் இணையில்லை” எனச்சொல்லும் கம்பீரம்.
“ஈங்கு உயிர்ப்போடு என்றென்றும்
குடியிருக்கும்
ஆண்டவனே பெரியன்”; மற்றோர்
அனைவருமே
சாமான்யர் என்பதனை சகலருக்கும்
இடித்துரைத்து
யாவரையும் சமமாகப் போற்றுகிற
பெருமையம்.
யாவர்க்கும் ஓர் சட்டம்.
யாவர்க்கும் ஓர் விதி
யாவர்க்கும் ஓர் நீதி,
யாவர்க்கும் ஓர் நியாயம்,
யார்க்கும் ஒரே கொள்கை,
யார்க்கும் ஒரே கோட்பாடு,
யார்க்கும் சமவாய்ப்பு,
யார்க்கும் சம மதிப்பு,
யாவர்க்கும் ஓர் தீர்வு,
தனைக்…காட்டும் ஆன்மபீடம்.
மாறா வழமைகளை,
மாறா நடைமுறையை,
பாரம் பரியத்தை, பழக்க வழக்கத்தை,
காலங்கள் மாறையிலும்
கடைப்பிடிக்கும் இறைஇல்லம்.
யார்க்கும் பணியாத, யார்க்காயும் தம்முடிவை
மாற்றாத, யாருக்கும் வளைந்து கொடுக்காத,
ஏற்றம் மிகு ஸ்தானம்.
எத்தனைபேர் வந்தாலும்,
எவர் எவர்தான் போனாலும்,
‘அத்தனையும்’… அட்சரம் பிசகாமல்
நேர்த்தியாக
நித்தம் நிகழுமிடம்.
நிழலடியில் வந்துசேரும்
எந்தக் கொம்பனையும் ஈர்த்து, அரவணைத்து,
சந்ததி சந்ததியாய்
சகலரையு மாகர்ஷித்து,
வம்புத் தனம் மாய்த்து,
மறுத்தவரும் மதிக்கவைத்து,
வம்பு புதுமை செய்து,
வந்தணைவோர் யாரெனிலும்
மும்மலங்கள் சாய்த்து,
முத்திக்கும் வழியுரைத்து,
யாவரதும் அகங்காரம் மமகாரம் தமைத் தணித்து,
‘பேராற்றலின்’ பெருமை போற்றும் பேராலயம். ஆம்..
ஆகம விதி தாண்டி அண்டிவரும் அன்படியார்
நேசத்திற் கிரங்கி நீதிசொல்லும்
பேராயம்.
அலங்காரம், இடாம்பீகம்,
கோடானு கோடிசெல்வம்,
அழகு, குவிந்தாலும்…
‘ஆன்ம அதிர்வென்றும்’
கலையாது காக்கும் கலைக்கூடம்.
‘இது’ நாங்கள்
மற்றவரைப் பார்த்து மலைத்த
நிலை மாற்றி
மற்றவர்கள் பார்த்து மலைக்கவைத்த பிரமாண்டம்.
பேரரசு செய்யவல்ல பிரமிப்புக் கட்டமைப்பை
ஓர் தனியாள் சாமா னியராய்
வழிவழியாய்
ஆற்றுப் படுத்த… அகன்று விரிந்துள்ள
சாம்ராஜ் யம்; பக்தி
சடைத்தெழுந்த தல விருட்சம்.
யாவும் ஒருசீராய்,
கணக்குத் தவறாமல்
யாவும் மிகச்சிறப்பாய்,
இயல்பாய்,
நடக்குதென்றால்…
யார்யாரோ சித்தர் ஞானிகளின் உயிர்ஜீவன்,
ஏதோ எமது அறிவுக்கெட்டா ஆற்றல்,
ஏதோ பெருஞ் சக்தி,
ஏதோ ஆன்ம அதிர்வு,
ஏதோ ஓர் மெய்ஞானம்,
ஏதோ ஓர் தெய்வீகம்,
‘மூலஸ் தானத்தில்’
‘முன்னூறு ஆண்டுகளாய்’
வாழ்ந்துறைந்து நித்தம் வரந்தந்து இயக்குவதே
காரணமாம்;
அதனைக் ‘கந்தசாமியார்’ என்றும்
‘வேல்’ என்றும் சொல்கின்றார்
விசயம் தெரிந்தவர்கள்!
வாருங்கள் …
நாமும் சென்றுகேட்போம்
நல் வரங்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.