கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத்,
துன்பம் சுமந்து
தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப்,
பார்த்துச் சிலிர்த்தருள்வான்…
பார்போற்றும் நல்லூரான்!
தீயாய் வெயில்கொழுத்தத்,
திசையும் தரை காற்றும்
சூடாய்த் தகிக்க,
எங்கோ… தொலைவிருந்து
ஊசி பலகுத்தி, முள் கொழுவி,
உடல் வருத்தி,
வேதனை வலியோடு விரதத்தில் ஊறி,
உயிர்
ஏக்கம் கவலைகளை இறக்கிவைக்கப்
பலர்… ‘பறவை
தூக்குக் காவடிகள்’ எடுத்து
‘நம் மனம் பதற’
வருகின்றார்!
ஆட்டக் காவடியில் ‘செடில் குத்தி’
உருகும் தெருவில்
உருவேறிப் பலர் குதித்தார்.
காலை மூன்று மணியிருந்து பலநூறு பேர் வெளி
-வீதி நிதம் சுற்றிப் பிரதட்டை அடிக்கின்றார்.
வேர்த்து விறுவிறுக்க, வெக்கையினில் உயிர்பொசுங்கத்,
தீச்சட்டி தூக்குகிறார் தேவதைகள்.
பாற்செம்பு
காவி அடியளித்துக் கசிந்தழுதார் இளம்மகளிர்.
நிதமும் விரதம் பிடித்து,
பசி நெருப்பில்
வதங்கும் வயிறுகளால் வரம்கேட்டு,
கொடியிறங்க
மழிக்கின்றார் தாடி மீசை பல ஆண்கள்.
பலபெண்கள்
முழுப்பொழுதும் உபவாசம் இருந்தும் பிரார்த்திப்பார்.
அடிபட்டுக் கொம்புகாவி ‘அவன் பாரஞ்’ சுமந்தேனும்
விடுபடுமா பழிபாவம்
எனத்துடிப்பார் காளையர்கள்.
வடம் தொட்டிழுத்து வல்வினைகள் போக்குதற்கு
இடம் தேடி ஏங்கிடுவர்
வழமையாய் வராப் பக்தர்.
சூடம் கொழுத்தி, அர்ச்சனைக்கு நட்சத்ரம்
பேர்சொல்லித், தேங்காய் அடித்துச் சுக்குநூறாக்கி,
சாம்பிராணி ஏற்றி
சாட்சாங்க மாக
வீழ்ந்து எழுகின்றார்… விண்ணப்பம் செய்யுமன்பர்.
தாமாக முன்வந்து…
தம் பட்டம் பதவிகளைப்
பாராது… தொண்டியற்றி,
பாடிப் பரவசித்து,
தேவாரம் பண்ணிசை பஜனை நிதம் இசைத்து,
காலடியில் கிடக்கின்றார் களங்கமற்றோர்.
‘மண்டகப்
படிவைத்து’ வரவேற்றுப், பிரசாதங்களும் படைத்து,
இடையறாது பூசித்தார் அயலடியர்.
அன்பருக்கு
தாகசாந்தி செய்தார் தம் பொருள் கரைத்துச் செல்வர்.
பசி
-ஆறி அடியவரின் வயிறுவாழ்த்த
தம்செல்வம்
போட்டுச் சமைத்துப் புரக்கிறார் நல்லோர்.
சென்ற-
நாட்டைவிட்டு வந்து
நல்லைச் சூழலிலிருப்போர்
கேட்கிறார் ‘கேள்வி – பதில்’ திரும்புமுன் கிடைக்குமென்று.
பாட்டுப் பரதத்தில் பணியும் கலைஞர் தம்
வேட்கைகளை சொல்கின்றார் வீதிகளில்.
இவ்வாறு
இரந்தும், கெஞ்சியும், இருந்தழுதும்,
உடலுயிரை
வருத்தியும்,
மனதுள்ளே வாக்குவாதம் நடத்தியும்,
உரிமையுடன் கேட்கும் ஒவ்வொருவர்
வரங்களையும்
அவரவர்க்கு ‘அலங்காரன்’
அள்ளி வழங்குவதால்…
அவரவரின் மனக்குளத்தின்
சலன அலை அமைதியாக்கி
தவிப்பைத் தணிப்பதனால்…
தன்னன்பைப் பொழிவதனால்…
எவருக்கும் பாரபட்சம் இல்லா தருளுவதால்…
‘இனிப்பினைச் சுற்றும் எறும்புகளாய்’
குகன் பின்னே
அனைவரும் திரள்கின்றார்.
மெய்அடியார் பெருகுகிறார்.
மனம் புழுங்கும் மாறுபட்டோர்…
விலாசமற்றும் போகின்றார்!