கனவுக் கவி !

கவிதை என்பது கனவு போன்றது!
கனவு ஆயிரம் கவின் அருள்வது,
எவரின் ஏக்கமும் தணிய வைப்பது,
இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது,
தவிக்கும் வாய்களில் அமுதருள்வது,
தடைகள் யாவையும் தகர வைப்பது,
கவிதை பாடினால் கவலை ஓடுது.
கவி… கனாக்களைக் கலைத்திடாதது.

கனவு காண்பதே பலரின் வாழ்வினைக்
கவலையற்றிட உதவு மென்கிறேன்.
“கனவு காண்பதே புது வழிகளைக்
கருத வைத்திடும்” இதையும் கண்டுளேன்.
“கனவு ஆழ்மன விருப்பு யாவையும்
கரத்தில் சேர்த்திடும் கருணை மிக்கது”
எனவுரைக்கிறேன்; கவிதையும் அதை
எவர்க்கும் தாறதால்… பயிலச் சொல்கிறேன்.

கவிதை கேட்டு மெய் கிறங்கு கின்றவர்
கவலை போக்குவார். கனவில் நீந்துவார்.
கவிதையின் சுவை செவியினில் கணம்
அருந்தியோர்… மது எதை விரும்புவார்?
கவிதை நாடியை நரம்பை மீட்டிடும்.
கனிய வைத்திடும் மனதை. நம்முயிர்த்
தவிப்பை ஓட்டிடும். தவறு தீ வழி
தவிர்க்க வைத்து…மேல் நிலைக்குயர்த்துமாம்!

கடவுளை, அறம், விதியை, காலத்தை,
கரைந்திடாத மெய்யதனை, நீதியை,
அடைய ஆயிரம் வழியிருக்கலாம்.
அதில் கவிதையே எளிய மார்க்கமாம்!
படியும்… நெஞ்சிலே, மனச் செவியிலே…
பரிவு தந்திடும் பகலிரவிலே…
விடுகதை எனத் தொடரும் வாழ்விலே…
விடைகள் சொல்லும் பா…பயின்றுயர்கவே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.