சந்நிதிப் பாதை

புதிய உலகம் பொருள்பின் அலையும்;
பொருளற் றெளிய பொருள்தன்னை
புகழும்; புளுகிப் புரளும்; அதனில்
பொடியின் அளவே நிதமொட்டும்!
இதனைப் பலரும் புரிவ திலையே,
இதயக் கருணை யுடன் யார்க்கும்
இரங்கு பவரை…சகல திருவும்
இணைய… வரமும் தருவாயே!

இணைய வெளியில் இளையர் தொலையும்
இழவு தொடரும் கலிகாலம்.
இதய மொழியில் இனிமை அருளி
இவரைக் கவரு இனி நாளும்.
உணரும் பயிர்கள்…உனையே ‘உலகுக்-
கொளி’யென் றறியும் படி செய் நீ!
ஒழுங்கு குலைய கவனம் கலைய
உதவு பவரில் எறி வேற்தீ!

பெரு ‘சந் நிதியில்’ உறையும் எளிய
பெருமை முருகு எனும் ‘வேலைப்’
பிறவி வினைகள் அழியத் தொழுது
பிணியும் சுடுவம் இனி நாளை!
தரும் ‘ஆ லிலையின் அமுதில்’ மருந்துந்
தரும் வேலழக னது தோளைத்
தழுவு; உயிரின் பசியும் துடைத்து
தருமம் சொலும் ‘சந்நிதிப் பாதை’!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.