ஆற்றங்கரை யோரம் ‘நர சமுத்திரம்’ திரண்டது.
அதன் அலைகளாய் சனத் தலைகளே அசைந்தது.
ஊற்றுப் பொங்கி ‘சந்நிதியில்’ அருள் மழை பொழிந்தது.
ஊர்களே திரண்டு தேரைக் கண்டு அதில் நனைந்தது.
தேரெரிந்து… அன்று மீண்டமைந்துமே நிமிர்ந்ததும்,
தீய்த்த பாவியர்க்கு நல்ல தண்டனை கிடைத்ததும்,
போர் கலைத்த காலம் கூட வேல் நிலைத்து வென்றதும்,
புரிக; இவை யாவும் ‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்!
எளிமை, சோடனைகள் அற்ற இயல்பு,
அணுக இலகுவாம்.
இதயம் சொல்லும் வார்த்தைகளே இங்கு மந்திரங்களாம்.
பழிகள் போக்கி நம்பும் யார்க்கும் பலன் கொடுக்கும் தெய்வமாம்.
பற்றும் உடல், உயிர்ப்பசியை நூர்க்கும் வேலன் சக்தியாம்!
எங்கிருந்து வந்ததிந்தக் கூட்டம்? எந்த ஈர்ப்பினால்
இத்தனைபேர் சேர்ந்து…
நேர்த்தி தீர்த்து நெஞ் சுருகினார்?
இங்குறையும் தெய்வ ஆன்ம ஆற்றலின் அதிர்வினால்…
ஏக்கம் விட்டு இஷ்ட சித்தி பெற்று அன்பர் மீள்கிறார்!
‘ஆற்றங் கரை ராஜன்’ தேரில் ஏறி வந்த காட்சியை,
‘அழித்தற் தொழில்’ செய்து சுற்றி வந்த வேலின் ஆட்சியை,
தேற்றி… துன்பமோட்டி… பக்தர் பசி தணிக்கும் மாட்சியை,
தேறு…’பூவரசின் நீழல்’ ஆறு… காண்பாய் மீட்சியை!