காலக் குரல்

காலத்தி னுக்குக் கருணை சிறிதுமில்லை!
வேத நிபுணனையும்,
வீர மறவனையும்,
கோடி திருவின் மேல் குடியிருக்கும்
குபேரனையும்,
ஆளும் அரசனையும்,
ஆண்டி, அசடனையும்,
என்றோ ஒருநாள் இரக்கமின்றிச் சாகடிக்கும்!
அன்று அவனில்லா வெற்றிடத்தால்
இப்புவிக்கு
ஏதுமே ஆகாது என்பதையும் நிரூபிக்கும்!
யாரையும் கணக்கெடாது
தன் கணக்கைப் பார்த்தபடி
ஞானியையும் அழைத்துப்போம்!
ஞாயத்தைப் பேசியவன்
மூச்சையும் பறித்தெடுக்கும்!
முட்டாளை, மேதையரை,
ஆச்சர்யம் விளைத்தவரை,
அவரவர்க்கு நாள் குறித்துக்
கொண்டேகும்!
யாரையும் நிரந்தரமாய்க் குடியிருக்க
மண்ணில் இடம் கொடாது…மாளவைக்கும்!
உண்மையிலே
காலத் தினுக்குக் கருணை சிறிதுமில்லை!
காலத் தினுக்கு
எதும் பற்றிக் கவலையில்லை!
காலத்தின் இதயத்தில் ஈரம் கசிவதில்லை!
காலத்தின் நெஞ்சம் கல்நெஞ்சம்…
இரக்கமில்லை!
“யாரில்லாப் போதும்
யான் இந்த வையத்தை
வாழவைப்பேன்” என்று “வணங்கா முடியாகப்…
பாலிப்பேன்” என்று
பணியாத் திமிராக…
காலம் நகர்கிறது!
கனவினையும் நனவினையும்
யார்க்கும் பரிசளித்து…,
யதார்த்தத்தில் சில காலம்
வாழ்வை உருசிக்க வைத்து…,
காலிடறி வீழவைத்து…,
யாவையும் வழமைபோல் மாறவைத்து…,
வெற்றிடத்தை
உடனே நிரப்ப வைத்து…,
உலகம் கணம் அதிர்ந்து
தடுமாறத் தடுத்து…,
சமநிலையைப் பேணிடுது!
“சாதித்தேன் யான்” என்றும்;
“சாதனையை முறியடிக்க
ஏலாது” என்றும்; எண்ணும் என்
இறுமாப்பில்
சம்மட்டியாய் இறங்கி “நீ
சாயவரும் வெற்றிடத்தால்
இம்மண்ணில் மாற்றமெதும் தோன்றாது”
எனச்சொல்லி
ஒன்றல்ல ஒரு லட்சம் உதாரணங்கள்
காட்டி…என்
மண்டைக் கனமழித்து
மயக்கங்களைக் களைந்து
உண்மைகளைச் சொல்கிறது….
உணர்கிறதா நம் மனது?

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 4This post:
  • 106644Total reads:
  • 78399Total visitors:
  • 0Visitors currently online:
?>