பயணி

இந்தத் தெருஅறியும் எது தனது தொடக்கம்,
எந்த இடம் தனது முடிவு, அந்தம்,
என்பதனை!
அதிலே பயணிக்கும்
அனேகர் அறிவார்கள்
எது தொடக்கம் முடிவு
எங்கு அது சென்று சேர்க்கும்
என்பவற்றை;
நானின்று வந்திப் புதுத் தெருவில்
நிற்கின்றேன்;
பாதைக் குறிகாட்டி உணர்த்திடலாம்.
நிற்போரும் போவோரும் எனக்கு உதவிடலாம்.
நிற்போர் போய்வருவோர்கள்
எனக்குவழி காட்டிடலாம்.
கடந்தோரென் நிலையறிந்து
புத்தி புகட்டிடலாம்.
நடப்பேன்…”காலம்
எனக்கேதோ வழியில்
தொடர்ந்து உதவு”மென்று
துணிந்து நடக்கின்றேன்!
காலமும், தெருவும்,
காணும் வழிப்போக்கர்களும்,
“நான் வீழ வேணு”மென்று நினைக்காட்டில்…
குறைந்தபட்சம்
உதவாத போதும்
உபத்திரவம் செய்யாட்டில்…
கடப்பேன்;
கடக்க வேண்டிய என் தூரத்தை!
நடப்பேன்;
இத்தெருவின் நானடையும் எல்லைவரை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.