காணக் கிடைக்காக் கவின்

காணவே கிட்டாத கும்பாபி ஷேகத்தின்
காட்சிகள் காணல்… வரம்.
காலம் கனிந்தது, கனவும் பலித்தது,
‘கண்டு- கொள்வாய்’ புண்ணியம்.
மாசம் இப் ‘பங்குனி உத்தரக்’ காலையில்
மகா கும்பாபிஷேகம் நிகழும்.
‘வலி வடக்குத் தெல்லி யூரின் துர்க்காபுரம்’
வளம், புதுப் பொலிவில் மிளிரும்.
ராஜ கோபுரம் ஐந்தும்; புனருத்தாரணம் செய்த
ரத வீதி, கோவில், அயலும்,
‘ராஜபாட்டை’ கொண்டு… பிரமாண்டமும் கண்டு…
தரும் நாளும் கோடி நிதியம்!
வா… ‘எண்ணைக் காப்பிடு’; மா…துர்க்கையைத் தொடு;
வாராதிவ் வாய்ப்பு… தொழுக!
வாய்த்த இப் பிறவியில் வந்த ‘நன் நாளில்’…தாய்
மடியில் வீழ்ந்தாசி பெறுக!

பலநூறு ஆண்டின் முன் ஈழத்தின் பால் பூத்த
பதி; முதற் துர்க்கைக் கோவில்.
பல இடர் சீண்டியும், சமர்கள் கால் ஊன்றியும்,
பாதிக்கப் பட்ட வாசல்.
நிலமிழந் தோடியோர், நிலைகுலைந்தே போனோர்,
நெஞ்சுள் தொடர்ந்த தேடல்….
நிலமைகள் மாறிட நிமிர்ந்தது ‘அன்னையால்’
நிறையும் ‘சொற் செல்வர்’ நாளில்!
ஒளிருது கருங்கல்லால் உறுதியாய்க் கருவறை,
உள் வீதிச் சுற்று மதிலில்…
உளிகளால் ‘அபிராமி அந்தாதி’ முழுவதும்
உயிர்க்குது… ஆளும் தமிழில்!
வழி சொல்லும் இறை; நரர் கருவிகள் ஆகிட…
மலரும் ‘கற் கோவில் மலரில்’…
வரும் அருள் வாசம், தேன், யுகயுக மாகவே…!
மாந்துவீர் நாளும் நனவில்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.