விபத்துக்களின் கோரம்

விமானப் பயணங்கள் பறவைகட்கு புதிதில்லை!
கப்பல் பயணங்கள்
மீன்களுக்கு புதிதில்லை!
புகைவண்டிப் பயணங்களை அட்டைகட்குப் புதிதில்லை!
அவையவைகள் அந்ததந்தப்
பயண அனுபவத்தை
தமது வாழ்வாயே கொண்டதனால்
அவற்றுக்கு
பயணச்சீட்டு, விசா,
அனுமதித்த நிறைக்கவலை,
பிரயாணப் பொதி, ‘போடிங் பாஸ்’,
ட்ரான்சிற், எனஏதும்
கரைச்சல்கள் இல்லை!
கண்டம் பலதாண்டி
வரும்பறவை: நீரோட்டம் மேவி
புதுத்திசையுள்
திரிகின்ற மீன்கள்: செல்வதற்கு எல்லையில்லை!
இடைநடுவில் வெடித்து
விமானம் சிதைவதையும்,
பெருங்கடலில் கப்பல் பிணமாகி மூழ்கலையும்,
தடம்புரண்ட இரயிலின் குருதிச் சகதியையும்,
பார்க்கும் பறவைகளும்
கண்டதிரும் அட்டை மீனும்
தாமே விமானம் தாம் கப்பல் இரயில்போல்
ஆனதனால் தாம் தப்பி
பிழைத்தெண்ணி மகிழ்ந்திடுமோ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply