தவமும் வரமும்
நீ கதைக்க நானுனக்குத்
தெம்பைத் தருகின்றேன்!
நீ சிரிக்க எனது மகிழ்வை அருள்கின்றேன்!
நீ அசைய நானுனக்கு
சக்தியை ஊட்டுகிறேன்!
நீ வலியைப் போக்க
‘வலி கொல்லி’ நல்குகிறேன்!
நீ உயிர்க்கப் பத்தியம்
நிறைய உதவுகிறேன்!
நீ எழும்ப நானுனக்கு
உற்சாகம் அளிக்கின்றேன்!
நீ நடக்க நானுனக்குத்
தைரியம் வழங்குகிறேன்!
நீ நிமிர என்கவிதை பாடி உசுப்புகிறேன்!
நீ வேகம் கொள்ள
நினை ஊக்கித் தவம் செய்வேன்!
நாடே …எனதருமைத் தாய்நாடே…
நீபடுத்து
நோயில் தொடர்ந்து கிடந்தால்
நொடிந்தழிவோம்
யாவரும்…உயிர்த்தெழுவாய் உடன்;
வரங்கள் உனைக்கேட்டேன்!