நிலா விருட்சம்

அமாவாசை வயலில்
அடுத்த தினங்களினில்
பிறைச் செடி முளைக்கும்!
பின் அது நிதம் வளர்ந்து
முழு நிலா விருட்சமாகும்!
அதன் ஒளி விழுதுகள்
அட்ட திசைகளிலும் அசைந்தாடும்!
அதன் கிளைகள்
வெட்டப் படும்… அடுத்து
வருகின்ற நாட்களிலே!
கிளை கொப்பு வெட்டப் பட
பழங்கள் காய் விதை பூ
இலைகள் உதிர,
இளைத்து நிலா விருட்சம்
அளவில் குறைந்து தேயும்!
அமாவாசைக்கு முன் நாளில்
தேய்ந்தழிந்த நிலவு விருட்சத்தின்
விதை மட்டும்
கீறல் பிறையொன்றாய்க் கீழுதிரும்!
மறுபடியும்
அமாவாசை வயலில்
அடுத்த தினங்களிலே
பிறைச்செடி முளைக்கும் …..
பின் அது நிதம் வளர்ந்து…..

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply