புதுமை ஆண்டு

புதிய தானதோர் ஆண்டு மலர்ந்தது!
புதுமை இம்முறை….யாரும் எவர்களும்
புதிதுடுத்து உயிர்த்து திருத்தலம்
போய்…அறுசுவை உண்டு சிலிர்த்திடும்
கதைகள் இல்லை! வீட்டில் இருந்துயிர்
களித்து குடும்பத்தி னோடு கதைத்துண்டு
அதிலும் இன்புறும் ஆண்டு; ‘கொரோனாவால்’
ஆடம் பரமற்றுப் பிறந்த புத்தாண்டிது!

நோயின் வாய் விட்டு இன்னும் வெளிவரா
நூதன தினம்; புதிய வருடத்தின்
வாயிலில் ஐயம் அச்சத்தின் ஊர்வலம்;
மனங்களில் கொடும் கேள்விகள் எஞ்சிடும்;
கோயில் மூடுண்டு….உள்ளேயே ‘பொங்கிடும்’.
குடும்பத் தோடு சுவாமி அறையிலே
நோயை வெல்லப் பிரார்த்தனை செய்குவோம்!
நோய் அனல் எங்கும் நூரவும் நேருவோம்!

மனித வாழ்வு மகத்துவம் மிக்கது!
வையத்தில் உயிர் யாவையும் நேசித்து
இணைந்து வாழ்வதே இயற்கைக்கு ஏற்றது!
இதை மறந்து சமநிலை மாற்றிடக்
கனவு கண்டத னாலே…உலகமே
கதி கலங்கித் தவறை உணர்ந்திடும்
கணம்! பிறந்த ஆண்டில் பல கற்று
களங்கம் போக்கணும்! உலகுய்ய வைக்கணும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply