காகிதக் கப்பலேறிகள்

இத்தனைக்கும் பின்னரும் இன்று புறப்பட்ட
ஒற்றைப் படகை
உயிருடனே மீட்டார்கள்!
உயிரிழந்து போன… உடைந்து சிதைந்துபோன
உருக்குலைந்து எந்தக்
கரையிலோ ஒதுங்கிவிட்ட
படகுகள் எத்தனைதான்?
பலிக்கடாய்கள் எத்தனையோ?

அமைதி மறுஜென்மம் அடைந்துபூத்துக்
காய்த்திருக்கும்
எமனிடத் திருந்து மீட்டெடுக்கப் பட்ட.. மண்ணில்
என்ன குறைந்ததென்று
ஏறினார் இவர் படகில்?
சின்னப் பிடிமானம் கூட இன்றி – உயிர்காக்க
என்ன விதமான துணையுமின்றி
பேயலைகள்
ஆர்த்து இரைக்கலையும்
மாபெருஞ் சமுத்திரத்தில்
காகிதக் கப்பல்களில் வாழ்வைக் கடந்து சொர்க்க
வாசல் அடைந்திடலாம்…
என்ற நம்பிக்கையினை
யாரூட்ட ஏமாந்தோர் யமன் முதுகில் சவாரி செய்தார்?
வசந்தம் விளையும் மடியைவிட்டு
வெறும் பாலை
வனத்திலென்ன செல்வம்
தேடி இவர் போனார்?
இருட்டும் இடரும் இலட்சம் இடிபுயலும்
மிரட்டப் பலமாதப் பயணத்திடை சுறாக்கு
இரையாகும் அச்சமின்றி
ஏன்தான் இவர் அகன்றார்?
அடுத்த திசை என்ன? அடுத்த வழி என்ன?
அடுத்த கணமென்ன ஆகும்? என
அறியாமல்
எந்தவொரு நம்பிக்கைப் படகேறி இவரகன்றார்?
புறப்பட்ட படகு எது?
போய்ச்சேர்ந்த படகு எது?
இடைநடுவில் தொலைந்ததெது யாரறிவார்?
அவலமாய்
இறந்தவரார்?
மீனிரையாய் மாறியோரார் யாரறிவார்?
ஊர்பேர் தெரியா ஒருகரையில்
புழுத்தூதி
புதைக்கப் படுவோரின் சேதியைப் புறக்கணித்து
உழுதால் தொழுதால் உயர்த்தும்
மடியை விட்டு
ஒளிபெருகும் வாழ்வு தேடி எங்கு
இவர் போகின்றார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply