அவிழாத புதிர்

எங்கேதான் போயிற்றவ் அலுமினியப்பறவை?
எங்கே அருவமாக இது
தன்னை மாற்றிற்று?
எங்கே தவறிற்று?தன்வயிற்றுள் காவிய
இருநூற்று முப்பத்து ஒன்பது முட்டைகளும்
ஒரு நொடியில் கூழாகி உடைய
முடிந்ததுவோ?
வானேறி உயரம் அளந்து சலித்ததனால்
ஆழியின் ஆழம் அறியத்துணிந்ததுவோ?
சூத்திரதாரிகளார்?
சூக்குமங்கள் தாமென்ன?
ஏற்பட்ட இடையூறு எது?பணமா
பழிவாங்கும்
ஏற்பாடா? விபத்தா?
விமானியின் தனித்தீர்ப்பா?
என்னதான் மர்மம்?
“இவ்வுலகின் கேள்விகள்
அனைத்துக்கும் பதிலுண்டு” எனுமறிவியற் ‘தலைக்
கனத்துக்கு’ தலையடியா?
கள்ள அரசியலின்
குணத்தாலே ஏற்பட்ட கொலைவெறியா
மனிதநேயம்
நனவினிலே செத்ததற்கு நற்சான்றா?
உண்மைகளைச்
சொல்லத்துடிக்கும் உதடுகளில் விலங்குபூட்டும்
உள்நோக்கத் துள்ளே…
உறைவதெதும் பயங்கரமா?
சினிமாவில் இரசிக்கவைக்கும் அதிரடிகள்
நிஜத்தினிலே….
மனிதத்தை அதிரவைக்கும்….
புதிரெப்போ அவிழுமடா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply