பூக்களைக் கசக்கும் பூதங்கள்

இன்னும் எத்தனை எத்தனை பூக்கள்தான்….
எரிந்து நூர்ந்து இன்று மறுபடி
சின்னப்பொறியாய்ப் புகையும் நெருப்பினைத்
திட்டமிட்டு வளர்க்கும் அனல்தனில்
வெந்து கருகிட உள்ளன? ஏனிவை
வீண் பழி சுமந்திறக்க இன்றாடின?
இன்று காண் சில வீழ்ந்தன… சாம்பலை
எவரும் காணலை…. காற்றோடு போயின….

தங்களின் நலன் காக்கவும், வீழ்கிற
தம்புகழினைத் தூக்கி நிறுத்தவும்,
தம்கனவை விருப்பை நனவாக்கி
தாம் நினைத்ததைச் சாதித்துக் காட்டவும்,
இங்கு கையறு நிலையில் அடிமையாய்
எதையும் செய்ய முடியாதிழிந்திடும்
பொங்கி அடங்கிய பூக்களைப் பொய்யாலே….
புதைத்து“புனிதர்தாம்” எனப்பலர் சொல்கிறார்!

காலநிலைகளுக்கு ஏற்ப நிறம்மாறி
காலச் சூழலுக்கு ஏற்ப பசியாறி
வாழ்வைத் தேடியே… ஏங்கிடும் பூக்களை
மாட்டி அவற்றைக் கசக்கித்…தேன் உண்டாடி
வாழ வல்லவர் வையத்தை ஆழ்கிறார்.
மனித நேயத்தை நிறுத்துமே விற்கிறா.
ஊமையாச்சு ஊர் இன்னும் பழிபோற்று
உதிரஉள்ளவை எவை? எவரறிகுவார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply