திருச்சபையில் பலி?

உன்னைக் கசக்கியது ஊருக்கே பாவ
மன்னிப்பு நல்கும் மணிக்கரமா?
உன் பிஞ்சு
மனதைக் குதறியது..
மானுடத்தை ஈடேற்ற
தனிப்பயிற்சி, ஞான அபிசேகம், இவை பெற்று
திருநிலைப் பட்ட அதிவணக்கத் திற்குரிய
ஒருகையா?
உன்னை உடைத்தது மறைக்கல்வி
வகுப்பா?
மரணத்தைத் தூண்டியது மதகுருவா?
“புனிதமெலாம் ஆண்டவர்க்கே போகட்டும்”
என ஒலிக்கும்
மணியொலிக்குள் மறைந்துபோச்சா
உனது கதறலொலி?
கனத்தது நம் நெஞ்சம்… கலைந்த உன் கனவுகளால்
குனிந்தது தலை…. உன்னைக்
குதறிய சாத்தானால்…!
பதச்சோறாய்ப் பார்க்கப் படாமல்
அறஞ்சொல்லும்
விதியின்முன் தீர்ப்பளிக்க வேண்டும் திருச்சபையே!
புனித அங்கிக்குள்
புகுந்ததொன்று பிசாசென்றால்,
புனிதமிழக்காது
தூய எல்லா அங்கிகளும்!
இன்று மதத்தின் புனிதத்தின் பேராலே
கொன்றோர்க்கு மன்னிப்புக் கொடுக்காமல்
போலிகளைத்
துகிலுரிந்து நீதியின் சுட்டு விரல் நெருப்பின்
தகிப்பென்னும் தண்டனைக்குள் சிறைப்பிடித்து
இச்சமூகம்
தன்னை நிமிர்த்தாட்டில்
தளிரே… உன் இழப்பின் முன்
எந்தப் புனிதநீரும்
எவரின் ஆசீர்வாதமதும்
எந்தச் செபமும்
எந்தத் திருப்பலிவும்
அற்பமாகத் தான் போகும்…
அர்த்தமற்றே தான் வீழும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply