சுவைப்போம் பொங்கல்

ஏர்நுனியை எழுத்தாணிஆக்கி…வேர்வை
தொட்டுப் பண்பட்டநன் நிலமாம் தாளில்
ஏர் ‘எழுதுவினைஞன்’ நிதம் எழுதிச் செல்ல
எழுந்ததடா பசுமைநெற் கவிவயல்கள்!
வேர்நுனிகள் மழைத்துளியை ருசிக்கக் கண்முன்
விளைந்ததடா நெல்மணிகள்!அறுத்தெடுத்துப்
போரடித்துப் புதிரெடுத்து இன்று…பொங்க
புத்துயிர்த்து நிமிர்ந்தனகாண் மகிழ்ந்தெம் ஊர்கள்.

பொழுதோடு எழுந்துதமிழ்க் கோலம் போட்டு
புதுப்பானை அடுப்பேற்றிப் பாழை மூட்டி
கழுத்தளவு நீர்விட்டுப் பாலுஞ் சேர்த்து
கருத்தொன்றிப் பொங்கவைத்துச் சரிய ஆர்த்து
கிழக்குமொட்டில் சூரியப்பூ மலரும் போது
கிளைந்தெடுத்த அரிசியிட்டு பயறு, நெய்,தேன்
அளவாகச் சர்க்கரை. பேரீந்தி னோடு
கஜூ பிளம்சும், கலந்துகிண்டி…இறக்கு பார்த்து!

உயிர்குடித்த வெடிகளிடை கூடப் பொங்கி…
ஓசைவெடிகொழுத்தி இன்று படைத்தோம் அந்த
உயர்…சக்திக் கதிரவனை வாழ்த்து கின்றோம்.
ஒளிவெயிலாய் அவன்வந்து சுவைப்பான்…என்றோம்.
நயம் மிகுந்த பண்பாடு…பொங்கல் எங்கள்
நற்றமிழின் நாகரிகச் சான்று…பொங்கல்!
‘ஜெயமுண்டு தைபிறந்தால் வழிபிறக்கும்’
செப்புது இப்புதுப்பொங்கல் சுவைப்போம் பொங்கல்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply