ஏன் சிரித்தாய் பாரதியே?

சிட்டுக் குருவிக்கும்
சுதந்திரத்தைச் சிந்திக்க
எட்டய புரத்தானே…
எப்படிச் சுகமெல்லாம்?
முண்டாசு ஒன்றே
முதுசமென்று… விடிவுக்காய்
புண் பட்டு அடிமைப்
பவிசுகளைத் துச்சமென்று
வாழ்ந்தவன் நீயாமே?
மானத்தை விற்காமல்
வீழ்ந்துயர்ந்தியாமே…?
பேஷ் நீயோர் ‘பேய்க் காய்’ தான்!
நின்னை எடை போடும்
நேர்மையில்லா மாக்கள் நாம்.
‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
என நீ தவித்ததையும்…
“நெஞ்சு பொறுக்கலியே”
என நேற்றழுதழுது
கட்டற்ற வாழ்வை நீ
காணத் துடித்ததையும்….’
“அற்புதம்.. ஆ” என்றாமோதித்து
உன் உணர்வைக்
கற்சிலையாய் ரோட்டினிலே
கட்டிக் கடன் தீர்த்தோம்!

இன்றுமிதோ…
புதிதாய்ப் பெயின்ற் பூசி
“உன் பழைய
சிலை திறந்தால் தமிழே
செழிக்கும்” என்ற அரசர் உன்
கலைக் கனவைப் போற்ற மீண்டுங்
கண் திறந்தோம்,
ஒலி பெருக்கி
“வீட்டு விடுதலை ஆகிநிற்பாய்”
எனும் உனது

மெட்டை முழங்க…,
விளங்காமல்
“உனக்கின்னோர் சிலையெடுக்க
வேணும்” எனச்
சிலிர்க்கின்றோம்!
அட நீயேன் சிரிக்கின்றாய்?
நாமெம் கடமையைத்தான்
செய்கின்றோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply