எழுதாத ஒரு கவிதை – பொலிகையூர். சு.க. சிந்துதாசன்

காலம், மாற்றம் என்ற இரண்டிற்குமான செயல் நெறித் தொடர்பானது ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாத அல்லது கால மாற்றத்தையோ, மாற்றம் காலத்தையோ பிரதிபலிப்பதை உணரும் படியான சூழல் ஒரு தனிமனிதன் குறித்தோ அல்லது சமூகம் சார்ந்தோ வெளிப்படலாம். இவ்வெளிப்பாட்டின் மூலக் கூறாய் விளங்கும் வாழ்வியலும் அதை நிரப்புகிற அனுபவ ஊற்றிலும் உணர முடியா வியப்புகளாய் வெளிப்படும் போது அவை அறிவியல் வெளியிலிருந்து வேறுபட்டு அல்லது அந்நியப்பட்டு நிற்பதைக் காணலாம்.

அந்த வகையில்,’என்னிலும் என் சூழலிலும் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்’ என்றும் ‘நெருக்கடி நெருப்புள் நிதமும் நின்ற போதும் என் கவிதைப் பூ கருகாமல் பூத்துக் கொண்டே இருந்தது’ என்றும் ‘அதற்கு யார் காரணமோ அறியேன்’ என்றும் என்னுரையிலே குறிப்பிடும் த.ஜெயசீலனின் மூன்றாவது கவிதைத் தொகுதி ‘எழுதாத ஒரு கவிதை'(2013) ஆகும்.
ஏற்கனவே ‘கனவுகளின் எல்லை'(2001), கைகளுக்குள் சிக்காத காற்று'(2004), போன்ற இவரது கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன.

‘பெற்றவர்க்கும் உற்றவர்க்கும்
பிரபலப் படுத்தி…எல்லாம்
கற்பித்து நல்லவழி காட்டியோர்க்கும்….’ இந்நூலைக் காணிக்கை செய்திருக்கும் கவிஞர் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதல் ‘என்னைச் சுகப்படுத்து’ஈறாக 112 கவிதைகளை 147 பக்கங்களில் தந்துள்ளார்.

பொதுவாக இந்நூலை நிறைத்திருக்கும் கவிதைகள் மரபோடு பயணிக்கின்றன. தமிழ், கவிதை, கவிஞனின் வாழ்வு, வரலாறு, நம்பிக்கை, ஆன்மீகம், உறவு, துணிவு, உண்மை, மனிதம், இயற்கை, சமூகம், இழப்பு, காத்திருப்பு, கற்பனை, நினைவுகள்,போர், தவிப்பு, உணர்வு, பொய்மை, நிகழ்காலம்,… போன்ற இன்னும் பல்வேறுபட்ட பாடுபொருட்களைக் கொண்டு இவரின் கவிதைகள் இயங்குகின்றன.

எழுதாத ஒரு கவிதைக்காய் ஏங்கி அதன் பண்பு இப்படியாய் இருக்க வேண்டி உழலும் ஒரு பாடுபொருள் ‘எழுதாத ஒரு கவிதை’ (பக் 08-09) என வெளிப்படுகிறது.

‘ஒரு கவிதை என்றாலும்
எழுதத் துடிக்கின்றேன்..
ஒருகவிதை எழுதுவது
ஒருபெரிய விசயமல்ல
எனினும்…
ஒரு கவிதை
உண்மையான ஒருகவிதை
…….
உய்விக்கும் ஒருகவிதை
ஒளிரும் லயக் கவிதை
எழுதத் துடிக்கின்றேன்.’
மனிதனாய் இருந்து மனிதத்துடன் வாழாமல் எதையெதையோ இது தான் பெரு மனிதம் எனக்கொண்டு வழிநடக்கும் யதார்த்தமான விடயத்தை ‘மனிதம் மறந்து’ (பக்32-33) என்ற கவிதையில் மிகவும் அச்சொட்டாகக் காட்டுகிறார்.
‘அடுத்தவன் பசி கண்டு துடிக்கவோ
அடுத்தவன் விழிக் கண்ணீர்
துடைக்கவோ
அடுத்தவன் வலிதன்னைத் தணிக்கவோ
அடுத்தவன் இரத்தம்
உறைவிக்கச் செய்யவோ
அடுத்தவன் துயர்
கேட்க முயலவோ
அடுத்தவன் சுமை
தன்னைப் பகிரவோ
அடுத்தவர்க் குதவவோ எண்ணிடாய்
ஆண்டவர்க்கு
அள்ளி இறைக்கிறாய்’
‘தேடுமெம் முன் வந்து சிரி’ (பக்145-146) என்ற கவிதையை வேலவனை வேண்டி வெண்பாவாய்த் தந்திருக்கிறார்.

‘காலப் பிழையோ…கலகக்கோள் தொந்தரவோ
நூலறுந்த பட்டமானோம்ளூ நொந்துபோனோம் -வேலவனே
என்றெம் வினையகலும்? என்றெம் விதி தெளியும்
இன்றும் உரைக்கலையே ஏன்’
இதுபோல் ‘என்னைச் சுகப்படுத்து’ (பக்146-147) என்ற கவிதை நல்லூர்க் கந்தனை விழித்து எழுதப்பட்டிருக்கிறது.
‘புன்னகையாம் தென்றலினால்
என்னுயிர்க்கு மருந்துகட்டி
உன்கை வருடலினால்
என்ஐயம் அச்சமோட்டி
என்னைச் சுகப்படுத்து எக்கணமும்
நல்லூரா’
ஓவ்வொரு கவிதையும் கவிஞரின் ஆழ்புலமையை ஏதொவோரு வகையில் வெளிக்கொணருகின்றது. புலமைசார்ந்து வெளிப்படும் இத்தொகுதியிலுள்ள கவிதைகள் அமைப்பு முறை, கருத்தியல் தெளிவு, போன்றவற்றால் முன்னிலை வகிப்பதுடன் கவிஞருக்கான தனித்துவத்தையும் வளங்கி நிற்கிறன.

ஈழத்தின் பெயர் குறிப்பிடக் கூடிய சமகாலக் கவிஞர்களில் ஒருவராக விளங்கும் த.ஜெயசீலனது கவிதைகள் மரபு சார்ந்து பயணப் படும் அதேவேளை சொல்ல வந்த கருத்தை கனதியாகவும் ஆழமாகவும் சொற்பிணைப்பை மேற்கொண்டு கவிதையில் வெளிப்படுத்தும் குறித்த பாணி ஏனையோரிலிருந்து இவரை வேறுபடுத்தியும் காட்டுகின்றது. அத்தோடு இவர் கவிதைகளை நகர்த்தும் விதமும் வியக்க வைக்கின்றது. கோட்பாட்டு ரீதியாக அல்லது தத்துவார்த்தமாக கையாழும் மொழி இலக்கியத்தை மேம்படுத்துவையும் காண முடிகிறது.

(இவ் இரசனைக் குறிப்பு ஜுலை 17-23, 2013 இல் வெளியான ‘சுடரொளி’ வாரப்பத்திரிகையில் வெளிவந்தது)

Leave a Reply