உயிர்ப்பழியா இசை.

இசையின் இதம் நீ;
உயிர்ப்பென்றும் குன்றாத
இசையின் பழமை, எழில், நவீனம் நீ;
அழியாத
இசையுன் இசை! வயது மூப்புவந்தும்
இளமைகுன்றா
இசையுன் இசை!
நீயோர் ‘சுயம்பு’,
‘சுயம்’ மிகுந்தோன்!
சுதந்திர புருஷன்!
யார்க்கும் கைகட்டி நிற்கா
சுதந்திரப் பிரியன்!
எவர்க்கும் அடிபணியா
சுதந்திர மனிதன்!
உன்விருப்பு வெறுப்புகளை
யார்க்காயும் விட்டுக் கொடா
‘வித்யா கர்வ’ தேவன்!
ஊரை மகிழ்ச்சிகளில்… உற்சாகம் கொள்ளவைப்போன்.
ஊரைக் கவலைகளில்… உன்மடியில் தேற வைப்போன்.
ஊர் நிம்மதி தேடின்…
உன்இசையால் அதைத்தருவோன்.
ஊர் மன இரணங்களுக்கு உன்குரலால் மருந்திடுவோன்.
ஊரின் பெருமைகள் உலகம் அறியவைப்போன்.
ஊரின் இரவுகள் உறங்கத்…
தாலாட்டுபவன்.
உந்தன் அசாத்தியத் திறனை,
‘செயற்கரிய
அன்றிருந்து செய்துவரும்’ அற்புதத்தை,
இடையறாத
உன் ஆற்றல் ஞானத்தை,
குன்றா உன் இசை இனிப்பை,
இன்றைக்கும் குறையா திருக்கின்ற
உன் மவுசை
கண்டு பொறுக்காதோர்…
நீ விலாசம் அற்றகல்வாய்
என்று காய் நகர்த்தியவர்…
நீ செய்த சாதனையை
எண்ணாது
தமிழரின் இணையிலா அடையாளம் நீ
என்பதை மறந்து, உனது இசை ஆளுமையை
நன்றாய் உணர்ந்தும்;
தம் வாழ்வில் நின் இசையை
நின்று இரசித்தும்;
நினது ஆற்றலுக்கு
“என்றும் இணை வேறு எவருமிலை” என்பதனை
இன்றும் தெளிந்தும்;
உன்னில், உன் செயல், பேச்சில்,
என்ன குறைகளைக் காணலாமோ
அதைக்கண்டு
தங்களது வன்மத்தை, மனக்காழ்ப்பை,
வசைப் பாட்டை
சொல்லித் தம் வக்கிரத்தை
சொறிந்து தீர்க்க முயலுகிறார்.
யாரெதைத்தான் சொன்னாலும்
அவற்றைக் கணக்கெடாமல்
நீ நினைத்த பாதையிலே
நீ நினைத்ததைச் செய்து,
நீயுன் வழமைப் பணிபுரிந்து,
நிமிர்ந்துயர்ந்து
யார்க்கும் அடங்காத காட்டாறாய்…
உயிருள்ள
யாவருக்கும் மூச்சுக் காற்றாய்…
‘எண்பத்தோர்
வயதினிலும்’ நகர்கின்றாய்!
வரலாற்றில் என்றென்றும்
உயிர்ப்பழியா… இசையாய் நீ
உலகுளநாள் வரை வாழ்வாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.