குளிர்த்திப் பொங்கல்.

ஆர்க்கும் பறையதிர்வு அயலை உருவேற்ற…
தீச்சட்டி, அடுக்குத் தீபம்,
கொழுந்துவிட்டு
நூரா தொளிர…
கரும்புகையும், கற்பூர
வாசமும், சாம்பிராணி மணமும்,
காற்றினிலே
கூடி அனல்தணித்துக் கொள்ளைப் பரவசத்தைச்
சூழலிலே தூவ…
சொல் மறந்து நின்றேன் யான்!

காண்டா மணியொலிக்க,
அரோகரா கோஷமுடன்
” ஆயிரம் கண்ணுடைய அன்னாய்
விழிதிறந்து
பாராயோ எம்மை?
பர்வத பத்தினியே
தீரம்மா எங்களது தீட்டு துடக்கையெல்லாம்
வா எழுந்து” என்று…
வாசலிலே கரகங்கள்,
காவடிகள் உடுக்கு பறையோடு கசிந்தழைக்க…
வசந்த மண்டபத்தில்
‘வல்ல ஆச்சி’ வீற்றிருந்தாள்!
உசிரை; கண்ட ஒருநொடியில்
உலுக்கியதவ்
வடிவு! சாந்த சொரூபம்,
கடைவாயில்
துடிக்கும் சிரிப்பு,
‘தூய ஆத்தை’ முகமெல்லாம்
கனிவு, இவை என்னைக் கட்டி
அணைத்துவிட…
‘குனித்த புருவமும் குமிண்சிரிப்பும்’
எனைமயக்க…
தீபச் சுடரில் சிரித்திருந்தாள் எனைப்பார்த்து!
தூபப் புகையில் சுகம்தந்தாள் எனைமீட்டு!
‘காளாஞ்சி’ தந்து, கருணை அருள்சொரிந்து,
“வா மகனே” என்று வருடினாள் எனை…அழைத்து!

மத்தியானப் பூசை முடிய..,
தாகசாந்தி
அத்தனை பேருக்கும் அன்னதானமும் தொடங்க..,
அமுதுண்டு,
ஆறி, அன்னை நினைவோடு
சுமையிறக்கி,
பஜனை சுதியேற்றிப் பாடி,
‘கிராம
வழிபாட்டு முறையில்’
வரிசைக் கிரமமாக
‘வளந்து வைத்து’ இரவிரவாய்ப் பொங்கி, கரகங்கள்,
எழுந்தாடும் பறவைக் காவடிகள்,
பாற்செம்பு,
எடுத்து..,நேர்த்திகளைத் தீர்த்து..,
விசேட பூசை
முடித்து..,மடைபரவி
‘வழிவெட்டியே’ ‘குளிர்த்திப்
பொங்கலும்’ நிறைந்தது!
பூர்வஜென்ம புண்ணியத்தால்
பங்கெனக்கும் கிடைத்தது!
‘திரியாய் பர்வத
பத்தினியின்’ ஆசி..பழவினைகள் பல ஓட
வைத்தது;
மனதினிலே நிம்மதி நிறைந்ததன்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.