கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

நாற்பது ஆண்டின்முன் நாற்றாய் எழுந்து…வந்த
காற்று, புயல்,மழையைக் கடந்து…
தினம் தினமும்
கிளைத்துத் தளைத்துக்
கெதியாய் மரமாகி,
வளர்ந்து விருட்சமாகி,
வானளையக் கிளைபரவி,
நிழல்விரித்து பலரும் நிமிர மடியாகி,
அழகோடும் ஆன்ற அறிவோடும்
சிறப்போடும்
விளங்கிடுது இது!
ஊரை விட்டு உலகளாவி
இரசிகர் களைத்தேடி,
இரசிப்பு தனைத்தாண்டி,
வரமிதனின் சொந்தம் உறவென்று
மனதாலே
இணைந்தோர் பலர் கூடி,
இன்றும் மிகச்செழித்து
இணையில்லா நிழலூடு இதம்பரப்பி,
“இவ்வூரின்
அடையாளம் இதும்” என்றும்
அற்புதங்கள் செய்கிறது!
இந்த விருட்ச நிழலின் கீழ்
ஆற்றலுள்ளோர்
வந்தமர்ந்து தம்தம் வரத்திறனைத்
திசைக்குரைத்தார்!
கிளை கொப்பில் புறாக்கள் கிளிகள்
மைனாக்கள்
எழுந்தருளிப் பாவகைகள் கீதம் இசைத்திருக்கும்!
வருடங்கள் தோறும் வரும் வசந்தம் போல் நாளில்
விருட்சம் புதுப்பொலிவாய் மிளிரும்.
அதன் சூழல்
திருவிழாவாய் மாறும்.
தேடி வந்து பசியாறி,
களைப்பாறி, பேச்சு கவி நடனம் இசையென்று
பொழிகின்ற கிளிகள், புறாக்கள்,
கலைக் குயில்கள்,
சூழலினைக் கட்டியே போடும்.
தொடர்ந்துயர்ந்து
வான்கடந்து விண்ணை வளைத்து
வளர்ந்தின்று
எந்த துயர் இடர்க்கும் அசையா நிமிர்வோடு
இன்றும் செழிக்கிறது இவ்விருட்சம்!
இன்றுவரை
எத்தனையோ பட்சிகள்
இதைப்பிரிந்து போனாலும்…,
எத்தனையோ சீவன்கள் கருத்து வேறு பட்டாலும்…,
‘புத்தம் புதியவைகள்’ அப்பப்போ
புகுவதனால்,
நித்தநித்தம் வெற்றிடங்கள்
நிரப்பப் படுவதனால்,
கிளைகள் சிலமுறிந்து
சில பக்க வேர்கள்
அழுகிச் சிதைந்தாலும்…
‘ஆதார ஆணிவேர்’
இன்றும் எல்லாமு மாயிருக்க;
ஆணிவேர்
நன்றாய் இயங்குமட்டும்;
நாளும் அதன் இயல்பு
குன்றாமல்…
ஆற்றல்,குணங்கள், தரம், திறமை
இன்றும் குறையாமல்…
யார்க்கும் தமிழ் நீழல்
தந்தித் ‘தனிவிருட்சம்’
சரிதம் படைக்கிறது!
சொந்த முயற்சியால் துளிர்க்கும்
இன்னும் நூறாண்டு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.