மனத்தால் எடுக்கும் மணிவிழா

இணையிலாச் சேவை நூறு
எம்மண்ணில் செய்வ தொன்றே
பணியென வாழும் வீரா!
பல் கலை தெளிந்த தீரா!
துணை…சொந்த நாவால் ஊறும்
சொல்லென்று…அதனால் வென்று
மணிவிழா காணும் ‘செஞ்சொற்
செல்வனே’…வாழி தேவா!

சைவமும தமிழும் செய்த
தவப்பயனாலே முன்பு
உய்விக்க வந்தோர் பல்லோர்!
உம் பெயர் அதனில் இன்று
மெய்யெனச் சுடர்தல் கண்டோம்!
வியப்பு நும் முயல்வே என்றோம்!
ஐய நின் சாம்ராஜ்யம் முன்
அன்றாடம் விரியப் பார்த்தோம்!

செந்தமிழ்ச் சைவ மண்ணைச்
சிவபூமி என்பார்! இன்று
உந்தனால் நம் எண் திக்கும்
உயர் ‘சிவ பூமி’ ஆச்சாம்!
நொந்தவர், முதிர்ந்தோர், மாற்றுத்
திறனுள்ள சிறார்கள், வாழ்வில்
சந்தோசம் காண் வைத்தாய்!
நாய்கட்கும் இல்லம் தந்தாய்!

சிறு செடி ஒன்று தோன்றி,
செழித்தெழில் விருட்ச மாகி,
பெருகியே தோட்டம் கூடி,
பிரமிக்க வைக்கும் காடாய்
உருவாதல் போல்…நின் வேர்வைத்
துளிகளும் திரண்டு ஓடும்
அருவியாய் ஆறாய் ஆச்சு!
அதில் வந்த பலனோ நூறு!

திரு வாசகத்தி னுக்கு
திறம் கற்களாலே கோவில்
உரு தீட்டி, நூற்று எட்டு
உயிர்மிகு லிங்கம் நாட்டி,
அரண்மனை ஆக்கி, மேன்மை
அரும் பொருட் காட்சிக் கூடம்
திறந்தின்னும் தொடர்வீர் சேவை!
செழிக்குதும் சமூகப் பார்வை!

மரணங்கள் மலிந்த காலம்.
மருமநோய் பெருகும் நாளும்.
வரையறை வாழ்வில்…பக்கம்
வருவோர்க்கும் அஞ்சும் நெஞ்சம்.
பெரு ‘மணி விழா’ எடுத்துப்
பெருமைகள் பேச ஏலாக்
குறை அழ…செஞ்சொற் செல்வர்
குரல் எழ…நம் உள் நேரும்!

கடன்பட்டோம்…”கருணை ஒன்றே
கடவுளாம்” எனும் நும் சொல்லோ
டுடன் பட்டோம்…தெல்லி துர்க்கைக்
கோமகள் சாட்சி வைத்து
எடுக்கும் நல் முயற்சி எல்லாம்
என்றும் வென்றோங்க நேர்ந்தோம்!
‘அடக்கி’ நும் மணி விழாவை
அகத்துளே பெரிதாய்ச் செய்தோம்!

ஆறு திரு முருகன் என்ற
அறிஞனை, செயலில் சொல்லில்
நூறு நூதனங்கள் செய்தும்
நொடிப்போதும் நுடங்கா அன்பின்
தூதனை, குடும்ப வாழவைத்
துறந்திட்ட ஞான வானை,
பாதைகள் தவறாக் கோனை,
பணிந்தனம்…போற்று கின்றோம்!