மாரி கண்மாரி

வானவிழி ஈரமொழி பேசுகிற போது
வாசநெடி மண்மடியில் பூசுவது யாரு?
மேனகைகளாய் நடனமாடுறது நாற்று
வெள்ளி மழை நெல்லினை விதைக்கிறது காற்று

சோவென இரைந்து சிறு சாரல் ஜதிபோடும்
சூறையது ஆலமர வேரில் கிளுக்கிண்டும்
கூதல் நடைபோடும் இடி கட்டியமும் கூறும்
குறண்டுகிறேன் நான்! ஒதுங்க இல்லையிடம் பாரும்

ஆட்லறிஷெல் வீழ்ந்து முகடன்றுடைந்த தாச்சு
அரைவருஷம் இடம்பெயர்ந்தம், கோப்புசமும் போச்சு
சீற், ஓடு.. பின் கண்முன் விற்பனையுமாயாச்சு
சீவியமோ இன்றொழிக்கில் மூழ்கிச் சுரத்தோடு!

‘ஐயாயிரம்’ இன்னும் எனக்கு வரவில்லை
அழிவென்று பதிந்தவர் ….பின் பார்க்க வரவில்லை
மெய்வதங்கி இருவருஷம்! மீட்சியெதும் இல்லை
வெளிநாட்டுத் தறப்பாளும் ஏன் எனக்கு இல்லை?

‘தீர்வுவரும் கூரைவரும், ஓடுவரும்’ நம்பி…
தெப்பமெனத் தோய்ந்தது தான் மிச்சம் அடதம்பி!
மாரியிடம் கேட்டழுதே இரங்கென்று வெம்பி
‘வாய்கிடுக்கப்’ பாடுகிறேன் வரம்வருமென்றேங்கி

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply