தங்கப் பொழுது

கண்களில் கோடி கனவு மிதக்கக்
களித்தது அந்நாளே -எங்கள்
காதல் மடியினில் கன்றுகளாகக்
கலந்தது அந்நாளே -புதுப்
பண்வகை பாடி பல விளையாட்டுப்
பயின்றது அந்நாளே -உயிர்ப்
பள்ளும் வயல்கடல் பார்த்து உறவைப்
பழகிய தந்நாளே!

ஏதும் பெரிதாய் வளர்ச்சியில்லை எழில்
இயற்கை செழித்ததங்கு -ஆனால்
ஏட்டிக்குப் போட்டியாய் அன்பும் அருளதும்
எம்மைப் பிணைத்ததன்று -எழில்
வாழ்வை இரசித்து உருசித்து மகிழ்ந்ததெம்
வாலிபம் கூடி நின்று -அந்த
வாசம் உயிர்வரை வீசிச்…சிலிர்த்திட
வைக்குது…எண்ண இன்று!

பள்ளிக்குப் போனதும் கோவிற் திருவிழா
பற்றிக் கிறங்கியதும் -முதல்
பஸ்ஸில் பயணமும் வண்டில் சவாரியும்
பார்த்த படக் கதையும் -செய்த
கள்ளம் குறும்பதும் காதற் கனவதும்
கற்ற புதிர் உணர்வும் -மனம்
கண்ட பழமையும் கேட்ட மகிமையும்
காயா திருக்கு இன்னும்!

எங்கள் இளமை நினைவெனும் தோணியில்
இன்பக் கடல் கடப்போம் -அதில்
என்னென்ன அற்புதம் கண்டு மகிழ்ந்த மென்று
இன்றேங்கியே தவிப்போம் -அது
தங்கு தடையற்ற காலம் இன்று …வாழ்வு
தாக்கத் துடி துடித்தோம் -அந்தத்
தங்கப் பொழுது இனி வராதா எனத்
தாகத்துடன் இருப்போம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply