துணைகள்

எனக்குத் துணை எனது நெஞ்சும் நிழலும் தான்.
எனைச் சுற்றி சனங்கோடி
இருந்தாலும்…
இறையருளின்
துணை எனக்கு மேலே தொடர்ந்தாலும்…
என்னதென்று
எனக்குத் துணை எனது
நெஞ்சும் நிழலுந்தான்!
எனது அகத்துணை என் நெஞ்சு!
அதே போல
எனது புறத்துணை எனதுநிழல்!
இன்றோ…. நான்
இவையும் என் துணைகளல்ல
என்பதுணர்ந்து கொண்டேன்!
எனது கவச குண்டலமாய் நிற்கு(ம்) நிழல்
இரவில் எனைவிட்டே ஏகிற்று எங்கேயோ?
கொடிய கனவுகண்டு,
குளறி விழித்தெழுந்து,
கிடக்குமென நிழலை எழுப்பினேன்…
அது இல்லை!
என்னுள் இருக்கும் என்நெஞ்சு
என்துணையாய்,
என்பாரம் இறக்கும் இடமாய்,
எனதுயரம்
என்சோகம் பகிரும் இளவலாய் இருந்ததுண்மை!
இன்றென்னுள் இருந்த அது
உனக்கு அடிமையாகி
உன்புகழைப் பாடி ஒரு சதத்துக்கும் உதவா(து)
என்னுள்ளே வெற்றிடத்தை
ஏற்படுத்திப் போச்சுதையோ!

உற்ற துணையிழந்தேன்
புறநிழற் துணை… பகலில்
பெற்றாலும்… அகத்துணையை உன்னிடம் இழந்த துணை
அற்ற சடப்பொருளாய் தான்நான் அலைகின்றேன்!
சுற்றத் துணையை இனி
எப்படித்தான் நம்பிடுவேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply