எரிமலைக் குழல்!

நின்குழலாம் ஊற்றில் குளிர்ந்து அருவியாகிப்
பொங்கி நிதம்பெருகும் புதுராகம்
உயிர் தளிர்க்க
உருவமிலா நீராய்.. உவமையிலாக் காற்றாய்
எனை என் மனதை
எனதுடலை வளர்த்ததன்று!
நின்குழலோர் அமுத சுரபியாய் பொழிந்ததன்று!
நின்குழலோர் அட்சய பாத்திரமாய்
உயிர்த்தன்று!
என்ன நடந்ததின்று?
என்னமாயந் தோன்றிற்று?
உன்குழல் எரிமலை வாயாய்…
அனற்பிளம்பை,
கொன்று உயிர்கருக்கும் எரிமலைக் குளம்புதனை,
கொட்டும் கொடுங்குழலாய் மாறிற்று!
சாவிரட்டும்
அமுதைச் சுரந்தகுழல்…
அட்சய பாத்திரமாய்
மகிழ்வை பொழிந்தகுழல் உயிர்பறிக்கும்
குழலாச்சு!
குழலினிலே மாற்றமில்லை
குழலூதும் உன்மூச்சின்
சுழலினிலே மாற்றமில்லை
ஆனால் உன் இதயத்தின்
பொருள்மாறி… என்னைப் புறந்தள்ளி…
வேறொரு ஆள்
உறையும் பதியாகி…. நான் ‘ஏதும் இல்லாமல்’
தெருவில் கிடப்பதனால்
சலனம் எதுவுமற்று
பெருநெருப்பை என்மீது
ஊதி வளர்க்கிறது!
களங்கம் எதுவுமற்று கனியுநின் குழலிருந்து
பொழிகின்ற குளிரருவி இன்று
அனற் குளம்பாச்சு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply