அணையாப் பசி அனல்

மூண்டு வயிற்றில் முளாசிடுது பசிநெருப்பு.
காங்கை அதாற்கிளம்ப
காய்ந்துலரும் வாய், நாவு.
வயிற்றினது ஏக்கம்
“வருமா அமுதம்” என்று
இருக்கையிலே…
நீரும் சில கவளம் சோறும்
வரமானாற் போதுமென்று
யதார்த்தம் புகையுதின்று!
அளவு பசிக்குண்டு…
ஆனால் அதைத்தணிக்கும்
அளவுணவுப் பெறுமதி ஆச்சு
ஐந்தாறு பங்கு!
கால்வயிறு அரைவயிறு காண
மிகுதி வெந்து
தோன்றும் எரிவில்
குடல்கள் சுருங்கிடுது!
இன்றை வரும்படிக்கு ஏதோ கிடைத்தாலும்
இன்றையை விட நாளை
மடங்கில் விலை எகிற…
‘மாறா வரும்படியில்’ மீதிச் செலவுகளும்
ஏறி உயர…
உணவுக் களிக்க
காசுபோதாக் காரணத்தால்
அதன் அளவில் போசணையில்
நாளுக்கு நாள் ‘துண்டு விழும் தொகையும்’
கூடிவர…
“ஏன் தான் வயிற்றைப் படைத்தான்
இறைவன்” என்று
வாடி வதங்கி
வயிறுபோல் முழுஉடலும்
தீய்ந்து கருகுவதோ
நாளையின் யதார்த்தமாச்சு?
யாரிடுவார் பசிஅனலில் அவி அமுது?
அவர்காலை
தேடிச் சரண்டையத்
திரியுதின்றை வரலாறு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.