நாங்கள்

எங்கு சென்று நம் வாழ்வை உயர்த்துவோம்?
எங்கு சென்று நாம் நிம்மதி காணுவோம்?
எங்கிருந்து எம் மகுடம் கொணருவோம்?
எங்கிருந்து எம் பெருமையை நாட்டுவோம்?
எங்கிருந்து யாம் விட்ட புகழ்க்கொடி
எடுத்து ஏற்றுவோம்? “எங்கெம் தனித்துவம்”
“எங்கெம் அடையாளம்” என்றென்று தேடுவோம்?
எம்மை நாம் என்று உண்மையாய்ப் போற்றுவோம்?

ஆயிரம் ஆண்டின் முன்பு இருந்தது
அரசு, அரண்மனை, அத்தாணி மண்டபம்,
கோயில்கள், கோட்டை, கொத்தளம்,போர்ப்படை,
குன்றிடா…வீரம், ஞானம், பெருஞ்செல்வம்,
ஓய்வி லாத உழைப்பு, அற ஆட்சி,
உயிர்ப்புக் காதார மான கலை , இசை,
போயிற்றந்தப் பொற் காலம்…அனைத்தையும்
புதைத்து யாவும் தொலைத்துக் கிடக்கிறோம்.

அடிமை யாதல், யார் யாருக்கோ அஞ்சியே
அடங்குதல், வலியோரிலே தொங்குதல்,
அடி வருடுதல், அஞ்சிப் பிழைத்திடல்,
அற்ப சலுகைக்காய் ஆற்றலை விற்றிடல்,
அடையாளம் என உள்ள அனைத்தையும்
அகற்றல், அவற்றைக் கைக்கொள்ளாமலே..எங்களின்
வடிவழித்தல், அந்நியத்தை சரண்புகல்,
வாழ்வு…என்றின்று நம்பி நலிகிறோம்!

“எம் முன்னோரிடம் யானை இருந்தது…”
என்று ஆர்ப்பமாம்; பூனையும் வைத்திடோம்.
எங்கள் பெருமை, பெருமிதம், சரிதமாய்
இருந்த வற்றைக் ‘கதையாய்’ எழுதுவோம்.
எங்கள் மேன்மையைத் ‘திரைப்படம்’ ஆக்கியே
எப்படி ஆண்டோம் என்ற கனவிலே
எங்கள் நனவைத் தொலைப்போம்; என்றென்றுமே
எமக்குள் நாம் முட்டி மோதுவோம்..நாறுவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.