இரவினது கர்ப்பத்தில் இருந்து
கிழக்கினிலே
பிறக்கும் பகல் வளர்ந்து
கணமும் பெரிதாகி
அந்தியிலே மூப்படைந்து
அடுத்த சில நொடியில்
நொந்து மரித்து
தொடுவான் சிதை எரிந்து
கரைந்து சாம்பலாய்க் கழிகிறது சமுத்திரத்தில்!
மறுபடியும் பகல்… இரவின் கர்ப்பத்தில்
கிழக்கினிலே
பிறக்குமது;
இந்தப் பிறப்பும் இறப்பும்தான்
‘நாளென்றும்’ மாறிடுது!
நம் வாழ்வை நகர்த்திடுது!
காலத்தைக் கோடிகோடிக் கூறாக்கி
அதனில் ஒவ்வோர்
கூறான நாட்கள்
எம்வாழ்வைக் கொண்டிழுத்து
ஓடிடுது;
‘ஒவ்வொருவர்க் கொவ்வொரு எண்ணிக்கைக்’
கூறு நாள் பரிசாகும்!
அதைக்கொண்டு பிறப்பிருந்து
இறப்பு வரைக்கும் எதைச்செய்தோம்
என்பதுதான்
“வரலாறா? அற்பமா?” நம்
வாழ்வென்று பறைசாற்றும்!